8 வழிச்சாலைக்கு ஆதரவு என்பது பொய் : பூலாவரியில் விவசாயிகள் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

சேலம்: சேலம்-சென்னை இடையே 10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘8 வழிச்சாலை அமைக்க நிலம் கொடுப்போரில் 89 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துவிட்டனர். 11 சதவீத பேர் மட்டுமே எதிர்கின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.  முதல்வரின் இந்த அறிவிப்பையடுத்து, சேலம் பூலாவரியில் நேற்று மாலை விவசாயிகள் கருப்பு கொடி கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமசாமி என்பவரது தோட்டத்தில் திரண்ட விவசாயிகள், தென்னை மரங்களிலும், வருவாய்த்துறையினரால் நடப்பட்ட நில எடுப்பு எல்லை கற்களிலும் கருப்பு கொடியை கட்டி, ஒரு போதும் நில எடுப்பை அனுமதிக்க மாட்டோம் என கோஷமிட்டனர். 8 வழிச்சாலைக்கு மக்களிடம் ஆதரவு இருப்பதாக கூறுவது பொய். பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் 5 மாவட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஏற்கனவே இருக்கும் சாலையை விரிவுப்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும். புதிதாக விளை நிலங்களை அழித்து சாலை அமைக்க விடமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயிகளின் இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: