மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டதை ஏற்க முடியாது: கனிமொழி எம்பி பேட்டி

சென்னை: சிறந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினருக்கான விருது, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழிக்கு நேற்று முன்தினம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். விருதை பெற்றுக்கொண்ட கனிமொழி எம்பி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 11 மணிக்கு சென்னை வந்தார். சென்னை வந்த கனிமொழிக்கு, திமுக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்த சிறப்பு மிகு விருதை எனக்கு வழங்குவதற்கு சிபாரிசு செய்த நாடாளுமன்ற குழுவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விருதை நான் பெறும்போது, திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியை நினைத்தேன். இந்த விருது கிடைக்கும் நேரத்தில் அவர் இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ந்து, பெருமை அடைந்து இருப்பார்.

அதே நேரத்தில் நான், திமுகவுக்கும், எனது அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் எனக்கு ஊக்கம் அளித்த சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி. மேலும், வேகமாக நான் பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தை இந்த விருது அளித்துள்ளது. அனைவரையும் இணைத்து, பணியாற்றி மதசார்பற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற மனஉறுதியை பெற்றுக்கொண்டேன். தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகிறோம்.

முக்கியமாக, இந்த விவகாரத்தில் காவிரி நடுவர் ஆணையத்தின் கருத்தை கேட்காமல், மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல், ரபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரம் பற்றியும் நாங்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறோம். திமுகவும், காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதை வலியுறுத்துகிறோம். இந்த விவகாரம் பற்றி நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: