யானைகள் புத்துணர்வு முகாம் தேக்கம்பட்டியில் துவங்கியது

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நேற்று துவங்கியது. தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கின்ற வகையில் கடந்த 2003ம் ஆண்டு முதல் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் நீலகிரி மாவட்டம் முதுமலையை அடுத்த தெப்பக்காட்டில் 4 ஆண்டுகள் நடத்தப்பட்டது. பின்னர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் 6 ஆண்டுகளாக  நடத்தப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் 11வது ஆண்டாக யானைகள் புத்துணர்வு முகாம், தேக்கம்பட்டியில் நேற்று காலை துவங்கியது. இந்த முகாமில் 28 யானைகள் பங்கேற்றுள்ளன.  முகாமில் பங்கேற்ற யானைகள் ஷவரில் குளிக்கவைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு அணிவகுத்து நிறுத்தப்பட்டன. தொடர்ந்து யானைகளுக்கு கரும்பு, பழங்கள் வழங்கி இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் முகாமை துவக்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, கலெக்டர் ஹரிகரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 6 ஏக்கர் நிலப்பரப்பில் யானைகள் முகாம், அலுவலகம், பாகன்கள் தங்குமிடம், பாகன்கள் ஓய்வறை, தீவனமேடை, சமையல் கூடம், பாகன்கள் மற்றும் யானைகளுக்கான கொட்டகைகள், குளியல் மேடை, ஷவர் மேடைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. முகாமில் காட்டு யானைகள் நுழைந்துவிடாமல் தடுப்பதற்காக 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 48 நாட்களுக்குபின் ஜனவரி 30ம் தேதி முகாம் நிறைவடைகிறது.

40 பேர் கைது: முகாம் நடத்துவதால், காட்டு யானைகள் கிராமத்தில் நுழைந்து விளைநிலங்களை சேதப்படுத்துகின்றன. எனவே புத்துணர்வு முகாமை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேக்கம்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 40 பேர், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஊர்வலமாக தேக்கம்பட்டி நோக்கி வந்தனர். இவர்களை மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோயில் அருகேயே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

வனத்துறை யானைகளுக்கும் விரைவில் புத்துணர்வு முகாம்

முகாமில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  நிருபர்களிடம் கூறும்போது, `கோயில் யானைகள் புத்துணர்வு முகாமுக்காக ₹1.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யானைகளால் யாருக்கும் இடையூறு இல்லாமல் பாதுகாப்பாக முகாம் நடத்தப்படுகிறது. இதுதவிர முதுமலை, பொள்ளாச்சி, வண்டலூர் முகாம்களில் வனத்துறைக்கு சொந்தமான 52 யானைகள் உள்ளன. இந்த யானைகளுக்கும் விரைவில் புத்துணர்வு முகாம் நடத்தப்படும்’ என்றார்.

தினமும் 6 டன் உணவு

முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு தினமும்  6 டன் பசுந்தீவன உணவாக கூந்தல்பனை, தென்னை மட்டை, புல் வழங்கப்படுகிறது. மேலும் பச்சைபயிறு, கொள்ளு, அரிசி, உப்பு, மஞ்சள் உள்ளிட்ட தானிய வகைகள்,  அஷ்டசூரணம், சவணப்ராஸ், பயோ பூஸ்ட் மாத்திரை, புரோட்டீன் சப்ளிமெண்ட், மல்டி  வைட்டமின் மாத்திரைகள், மினரல் மிக்சர் ஆகியவை கால்நடை மருத்துவர்களின்  பரிந்துரையின் படி யானைகளுக்கு அளிக்கப்படவுள்ளது

மவுத் ஆர்கான் வாசிக்கும் யானை

முகாமிற்கு  வந்துள்ள யானைகளில் இரட்டை திருப்பதி  வைகுண்டம் அரவிந்தலோச்சனார்  கோயில் லட்சுமி யானை மவுத் ஆர்கான் வாசித்து காட்டியது. தரங்கம்பாடி  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் யானை அபிராமி காலில் கொலுசு போட்டு  நடனமாடி அசத்தியது. மிகவும் குறைந்த வயதுடைய கள்ளழகர்கோயில் யானை  சுந்திரவள்ளி (12), திருப்பரங்குன்றம் தெய்வாணை(12) யானைகளும் முகாமில்  பங்கேற்றுள்ளன.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: