அமமுக-விலிருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி

சென்னை: அமமுக முன்னணி தலைவர்களில் ஒருவரான செந்தில் பாலாஜி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். விரைவில் மிகமுக்கியமானவர்கள் திமுகவுக்கு வருவார்கள் என்று அவர் கூறினார்.அதிமுக முன்னாள் அமைச்சரும் அமமுக முன்னணி தலைவர்களில் ஒருவருமான செந்தில்பாலாஜி நேற்று பகல் 12 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்தார். திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். முன்னதாக மு.க.ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி பூங்கொத்து வழங்கினார். அவருக்கு ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.அவருடன் பி.சரவணன், மாலதி நல்லுசாமி, பி.கே.எஸ்.முரளி, பாஸ்கரன், சந்துரு, திருஞானம், சேர்மன் ராமலிங்கம், மீனவர் அணி என்.தியாகராஜன், தகவல்தொழில்நுட்ப அணி ஜே.அசோக், வர்த்தக அணி எஸ்.சுதாகர், அமைப்புச்சாரா அணி கே.சுப்பிரமணி, நெசவாளர் அணி ஆர்.ஜோதிபாசு, ஆர்.எஸ்.ராஜா, முன்னாள் கவுன்சிலர் பரமசிவம், பி.மோகனசுப்பு, பி.விஜயகுமார் உள்ளிட்ட 1500 நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, ஆர்.எஸ்.பாரதி எம்.பி., திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ., கே.சி.பழனிசாமி, ஆ.ராசா, கரூர் மாவட்ட செயலாளர் நன்னியூர் ராசேந்திரன், விவசாய அணிச் செயலாளர்கள் கே.பி. ராமலிங்கம், கரூர் சின்னசாமி உடனிருந்தனர்.

சந்திப்புக்குப் பின்னர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:

தொண்டர்களை அரவணைத்து ெசல்பவர்தான் சிறந்த தலைவராக இருக்க முடியும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை அரவணைத்து செல்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு இயக்கத்தின் கீழ் நான் செயல்பட்டேன். தற்போது ஸ்டாலின் மீது உள்ள ஈர்ப்பு காரணமாக திமுகவில் அடிப்படை உறுப்பினராக என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன்.

தொண்டர்களின் அரவணைப்பை ஸ்டாலின் பெற்றிருக்கிறார். கரூர் மாவட்ட மக்கள் உணர்வு, எண்ணம், விருப்பம் அடிப்படையில் நான் திமுகவில் என்னை இணைத்திருக்கிறேன். எடப்பாடி, ஓபிஎஸ் ஆட்சி தமிழக மக்களின் நலனுக்கு எதிரான ஆட்சி, மத்திய அரசுக்கு அடிபணிந்து நீட், ஸ்டெர்லைட் போன்ற தமிழகத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக விட்டுத்தருகிறது.

ஆனால், தமிழக மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவராக மு.க ஸ்டாலின் விளங்குகிறார். அவர் கரத்தை வலுப்படுத்தவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். விரைவில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், இந்த முடிவை எடுத்து திமுகவில் இணைவார்கள்.தமிழகத்தில் உள்ள இருளை அகற்றி, ஒளி தருவது சூரியன்தான். தமிழகத்தில் எப்போது நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வந்தாலும், மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எறிந்து, ஸ்டாலின் தலைமை ஏற்கும் வகையில் திமுகவுக்கு மகத்தான வெற்றி தேடி தருவார்கள். ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் அமரவைப்பார்கள்.

அதற்காக நான் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுவேன். கரூரில் உள்ள 4 தொகுதிகளிலும், கரூர் நாடாளுமன்ற தொகுதியிலும் திமுக மகத்தான வெற்றி பெறும். அனைத்து நிர்வாகிகளுடன் இணைந்து உழைப்பேன்.1996ல் நான் சுயேச்சையாக ேபாட்டியிட்டு கவுன்சிலர் ஆனேன்.  பிறகு அதிமுகவில் இணைந்தேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு தலைமையை ஏற்று செயல்பட்டேன்.

இப்போது மு.க.ஸ்டாலின் மேல் உள்ள ஈர்ப்பால் திமுகவில் இணைந்துள்ளேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தின் உரிமைகள் பறிபோகிறது. தமிழக மக்கள் அனைவரும் தங்கள் மனதில் மு.க.ஸ்டாலினை வைத்துள்ளனர்.

இருள் என்று நீங்கள் கூறியது தினகரனையா?

ஒரு தலைமையின் கீழ் செயல்பட்டு விட்டு, அந்த தலைமை குறித்து நான் பதில் சொன்னால், அது மரபு பண்பாக இருக்காது.

18 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கில் தினகரன் முடிவை எதிர்த்து நீங்கள் திமுகவுக்கு வந்தீர்களா?

18 எம்எல்ஏ பற்றிய தீர்ப்பு வந்தபோது அப்பீல் வேண்டாம், என்று சொன்னவன் நான்.

உங்களை போல மற்ற எம்.எல்.ஏ.க்களும் திமுகவுக்கு வருவார்களா?

நான் யாரையும் அழைக்கவில்லை. அது அவர்கள் விருப்பம். விரைவில் பல்லாயிரக்கணக்கானவர்களும், மிக முக்கியமானவர்களும் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று திமுகவில் இணைவார்கள். நான் கடந்த ஒருமாதமாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. நான் கடந்த ஒருமாதமாக எல்லோரிடமும் கலந்து பேசி கரூர் மாவட்ட மக்களின் எண்ணத்திற்கு மதிப்பளித்து இந்த முடிவை எடுத்தேன்.

எம்.எல்.ஏ.வாக இருக்கும்போது நான் சுயமாக முடிவு எடுக்க முடியாது. சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இப்போது எம்.எல்.ஏ.வாக இல்லை என்பதால் சுயமாக இந்த முடிவு எடுத்துள்ளேன். மக்கள் ஜெயலலிதாவுக்கு தான் வாக்களித்தார்கள். எடப்பாடி. ஓ.பி.எஸ்.சுக்கு வாக்களிக்கவில்லை. இந்த அரசு குறுக்கு வழியில் பதவிக்கு வந்துள்ளது. பதவி இல்லை என்றால் எடப்பாடி விவசாயம் பார்க்க சென்று விடுவார்.  

திமுகவிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்ததா?

நான் எடுத்த முடிவு கரூர் மாவட்ட மக்கள் முடிவு. அந்த மக்கள்தான் என்னை 3 முறை வெற்றி பெறச் செய்தார்கள். அவர்கள் உணர்வுக்கு மதிப்பளித்துள்ேளன்.

திமுகவில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்குமா?

மு.க.ஸ்டாலின் தொண்டர்களை அரவணைப்பவர். அவர் தலைமையில் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு திமுக ேவட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

செந்தில் பாலாஜி வருகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானவர்கள் ஏராளமான வாகனங்களில் அறிவாலயம் வந்திருந்தனர். பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: