ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக துணை முதல்வர் ஓபிஎஸ், விஜயபாஸ்கருக்கு சம்மன்: பொன்னையனும் 18ம் தேதி ஆஜராகிறார்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் வரும் 20ம் தேதி ஆஜராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் 18ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல், முன்னாள் அமைச்சர் பொன்னையனும் ஆஜராக உள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்துஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ்சை விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. காரணம், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில் அவரது பொறுப்புக்களையும் சேர்த்து ஓபிஎஸ் கவனித்து வந்தார். அவர், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரை பார்க்கவே இல்லை என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில் சசிகலா தனது பிரமாண வாக்குமூலத்தில் ஜெயலலிதாவை ஓபிஎஸ் பார்த்தார் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, ஜெயலலிதாவை ஓபிஎஸ் பார்த்தாரா, இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

இந்த நிலையில், நிதித்துறை அமைச்சராக ஓபிஎஸ் தான் ஜெயலலிதா பொறுப்பையும் கவனித்து வந்ததால், அவரை மேல்சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே தெரிவித்தார். அப்போது, இது தொடர்பாக, தலைமை செயலாளர் ராமமோகன ராவ், அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆலோசனை செய்ததாகவும் ஆணையத்தில் சிலர் வாக்குமூலம் அளித்தனர். அப்படியிருக்கையில், ஜெயலலிதாவை ஏன் வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல ஓபிஎஸ் முயற்சிக்கவில்லை என்ற கேள்வி ஆணையத்திற்கு உள்ளது.  

இந்த சூழ்நிலையில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முதன் முதலில் குரல் எழுப்பிய ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஆணையம் சார்பில் வரும் 20ம் தேதி ஆஜராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சம்மன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை குறித்து தினமும் அப்போலோ மருத்துவக் குழுவிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தியுள்ளனர். அவரின் பரிந்துரையில் தான், சுகாதாரத்துறை சார்பில் ஒரு மருத்துவ குழுவும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை கண்காணிக்க நியமிக்கப்பட்டது. ஆனால், அந்த குழுவில் இடம்பெற்ற டாக்டர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜரான போது ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று வாக்குமூலம் அளித்திருந்தனர்.

எனவே, அந்த குழுவை பணி செய்ய விடாமல் தடுத்தது யார் என்ற கேள்வியும் ஆணையத்திற்கு எழுந்துள்ளது. இதேபோல், ஜெயலலிதாவிற்கு எந்தவிதமான சிகிச்சைகள், மருந்துகள் அளிக்கப்பட்டது என்பது குறித்து சுகாதாரத்துறை சார்பில் அந்த காலகட்டத்தில் ஒரு அறிக்கை கூட வெளியிடப்படவில்லை. ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க டாக்டர்கள் வலியுறுத்தியிருந்த போதும் கடைசி வரை அந்த சிகிச்சை அவருக்கு அளிக்கப்படவில்லை. எனவே, இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்துவதற்காக வரும் 18ம் தேதி ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோன்று ஜெயலலிதா மரணத்தில் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொன்னையன் சந்தேகங்களை எழுப்பி வருகிறார்.

எனவே, அவருக்கும் வரும் 18ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அவருக்கு உளவுத்துறை (கோர் சிஐடி பிரிவு) துணை கமிஷனர் சுதாகர் தலைமையில்தான் செயல்பட்டது. எனவே, அவரிடம் விசாரணை நடத்தினால் சிசிடிவி ேகமராவை யார் நீக்கச் சொன்னது  என்பது குறித்து உண்மை வெளிவர வாய்ப்புள்ளது. எனவே, அவரை வரும் 20ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பட்டுள்ளது என்று விசாரணை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: