ஐந்து மாநில தேர்தலில் பாஜ படுதோல்வி அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

சென்னை: ஐந்து மாநில தேர்தலில் பாஜ படுதோல்வி நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.பாமக நிறுவனர் ராமதாஸ்: விவசாயம், பாசனம், கல்வி, சுகாதாரம், தொழில்துறை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி, பல சாதனைகளை படைத்திருக்கிறீர்கள். அதற்கான பரிசாகத் தான் பிரிக்கப்பட்ட தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கு முதல்முறையாக நடத்தப்பட்ட தேர்தலிலும் மக்கள் உங்களையே தேர்வு செய்துள்ளனர். அந்த வகையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உங்களின்  மக்கள் பணியும், முற்போக்குத் திட்டங்களும் தொடர வேண்டும். இரண்டாவது முறை முதல்வராக பதவியேற்கவுள்ள உங்களுக்கும், அமைச்சரவை சகாக்களுக்கும் பாமக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழக பாஜ தலைவர் தமிழிசை: ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பாஜக துள்ளிக் குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும்  முடிவுகள் பாஜகவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை. பாஜகவிற்கு நிகழ்ந்திருப்பது படுதோல்வியும் அல்ல வெற்றிகரமான தோல்விதான். காங்கிரசின் அருதிப் பெரும்பான்மையான வெற்றியுமல்ல.  முதலில் காங்கிரசும் பிற எதிர்கட்சிகளும் எப்போது பாஜக வெற்றி பெற்றாலும் வாக்கு இயந்திரத்தையே குறை சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

முதலில் அதற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். இன்னொரு முக்கியமான கருத்து, இந்தியாவில் 54% மக்கள் மோடி தான் எங்கள் பிரதமராக போகிறார் என்றே சொல்லியிருக்கிறார்கள். அதே மக்கள் ராகுலுக்கு 20%  வாக்குகளைத் தான் தருகிறார்கள். ஆக மோடி அலை ஓயவில்லை, ஓயவுமில்லை. மோடி அலைக்கு எதிரான தலை எதிரணியினருக்கு கிடையாது.திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் தலைவர்): 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மக்கள் காங்கிரசுக்கும், ராகுல் காந்திக்கும் மகத்தான ஆதரவை தந்துள்ளனர். ராகுல் காந்தியின் தொடர் சுற்றுப்பயணமும், கடின உழைப்பும் இந்த  வெற்றியை தேடி தந்துள்ளது. அதேநேரம் பாஜவுக்கு இந்த தேர்தல் மிகப் பெரிய பின்னடைவை தந்துள்ளது. .வைகோ (மதிமுக பொது செயலாளர்): ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது. பேராபத்து நம்மை சூழ்ந்து இருக்கிற நிலையில் பாஜ வீழ்ந்துள்ளது. மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. 2019ல்  காங்கிரஸ் மாநில கட்சிகளின் கூட்டமைப்புகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க போகிறது.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): ஐந்து மாநிலங்களில் பாஜவிற்கு கிடைத்திருக்கும் இந்த பெருத்த அடி, நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகும்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி தலைவர் தலைவர்): நாட்டில் மக்களிடையே நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இத்தேர்தல் முடிவுகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தி அரசியல் பயனடைய முயன்ற பாஜவிற்கு மக்கள் தக்க பதிலடியை கொடுத்துள்ளார்கள். நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர்): நடந்து  முடிந்துள்ள 5 மாநில தேர்தலில் பாஜகவை மக்கள் புறக்கணித்துள்ளனர். மக்களவை  தேர்தலுக்கு இன்னும் நான்கு மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், இந்த   தேர்தல் முடிவு என்பது மக்கள் நலனுக்கு எதிரான கார்ப்பரேட் ஆதரவு மோடி  அரசுக்கு அளித்துள்ள பரிசாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: