5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடம் என்ன?: வெற்றி, தோல்விக்கு பரபரப்பான காரணங்கள்

தெலங்கானா: இந்த புதிய மாநிலத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. புதிய மாநிலம் உருவாக பாடுபட்ட டிஆர்எஸ் கட்சியை அவ்வளவு எளிதாக மாநில  மக்கள் மறந்துவிட மாட்டார்கள் என்பதை இந்த தேர்தல் வெற்றி உறுதிபடுத்தியுள்ளது. இந்த நம்பிக்கையை டிஆர்எஸ் கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர ராவ் தக்க வைத்துக் கொண்டார். அதேவேளையில், தெலுங்கு தேசம்,  காங்கிரஸ் கூட்டணி கடைசி தருணத்தில் உருவானதால் அவற்றின் மீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை. அதேபோல், வாக்குறுதிகளை மட்டும் வாரிவழங்கிவிட்டு எதையும் செய்யாத பா.ஜ.வை புறக்கணித்துவிட்டனர்.மத்தியப் பிரதேசம்: கடந்த 2013 சட்டப் பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 230 இடங்களில் 165ல் வெற்றி பெற்று பா.ஜ. ஆட்சி அமைத்தது. தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர்  சிவராஜ் சவுகான் முயற்சி மேற்கொண்டார். ஆனால், அது சாத்தியமாகவில்லை. கடந்த தேர்தலில் 91 தொகுதிகளில் 10 சதவீதம் அதிக வாக்குகள் பெற்றுதான் பா.ஜ. வெற்றி பெற்றது. அதேபோல், 73 தொகுதிகளில்  எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதால் பா.ஜ.வுக்கு வெற்றி வாய்ப்பு எளிதானது. ஆனால், இந்த தேர்தலில் இந்த பலவீனத்தை காங்கிரஸ் பயன்படுத்தி தனது வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. கடந்த தேர்தலில் 58  தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற காங்கிரஸ் இந்த தேர்தலில் ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் தீவிர பிரசாரமும் மக்களுக்கு அளித்த நம்பிக்கையும்தான். அதேவேளையில் பா.ஜ.  ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முயன்ற அளவுக்கு மற்ற தலைவர்கள் முயற்சி செய்யவில்லை, பிரதமர் மோடியே குஜராத், கர்நாடகாவில் பிரசாரம் செய்த அளவிற்கு இங்கு பிரசாரம்  செய்யவில்லை. ஆட்சியின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது அதற்கு வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான்: முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் பா.ஜ. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று அந்தக் கட்சியினர் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், ஆட்சியின் மீது பொதுமக்களுக்கு இருந்த அதிருப்தியை காங்கிரஸ்  தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டது. இதனால், காங்கிரசின் வெற்றி எளிதானது. ஆட்சிக்கு எதிராக பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்து இருப்பதை உணர்ந்த பா.ஜ. தலைமை, இந்த தேர்தலில் பல எம்எல்ஏக்களுக்கும் சில அமைச்சர்களுக்கும் மீண்டும் போட்டியிட டிக்கெட் தர மறுத்துவிட்டது. இதனால்,  அவர்கள் அதிருப்தி வேட்பாளர்களாக களம் இறங்கினர். இதுவும் அந்த கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியது. அதன் தாக்கம் தேர்தலிலும் எதிரொலித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, பா.ஜ. ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதே எதார்த்த நிலையாக இருப்பது தெரிகிறது.சட்டீஸ்கர்: நான்காவது முறையாக ஆட்சி அமைக்க பா.ஜ. முயன்றது. முதல்வர் ராமன் சிங் தலைமையில் தேர்தலை சந்தித்த அந்தக்கட்சிக்கு இந்த தேர்தலில் பொதுமக்கள் வாய்ப்பு அளிக்கவில்லை. 15 ஆண்டுகளுக்கு பிறகு  சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப் போகிறது. பா.ஜ. ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை அந்தக் கட்சி நிறைவேற்றவில்லை என்பதை பொதுமக்கள் உணர்ந்தனர். அதேபோல், மத்தியில் பா.ஜ. ஆட்சியில் எதிர்பார்த்த  நன்மைகள் மாநிலங்களுக்கு கிடைக்கவில்லை. பொருளாதார முன்னேற்றம், வேலையில்லா திண்டாட்டம் என்று பல்வேறு பிரச்னைகள் தலைவிரித்து ஆடியது. இவை எல்லாம் ஆளும் கட்சிக்கு பாதகமாக மாறியது காங்கிரஸ்  கட்சியின் வெற்றியை பிரகாசப்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அனல் பறக்கும் பிரசாரத்தால் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பை தந்துள்ளனர்.

மிஜோரம்: இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கு பா.ஜ.வுக்கு இல்லை என்பதுதான் ஒவ்வொரு தேர்தல் முடிவும் தெரிவிக்கும் உண்மை. இந்த மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம்  என்பதுதான் வரலாறு. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. தற்போது பிரதான எதிர்க்கட்சியான மிஜோரம் தேசிய முன்னணி பெரும் வெற்றியைப்பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் ஒரு முறைகூட பா.ஜ. வெற்றி பெற்றது கிடையாது. இருந்தாலும் சிறிய கட்சிகளின்  துணையுடன் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் பா.ஜ. ஈடுபட்டது. ஆனால், அதன் முயற்சிக்கு சிறிதும் பலன் கிடைக்கவில்லை.

‘பாஜ எங்குமில்லை என்பதை அரையிறுதி நிரூபித்துள்ளது’

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்  சோனியா காந்தி கூறுகையில், ‘‘5 மாநில தேர்தல் முடிவு, ராகுலின் கடின  உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்காக ராகுல் கடினமாக  பாடுபட்டுள்ளார்’’ என்றார்.மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல்  காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பதிவில், ‘‘மக்கள் பாஜவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இது மக்களின் தீர்ப்பு, நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள வெற்றி.  இது ஜனநாயகத்தின் வெற்றி. அநீதி, அட்டூழியங்கள், ஜனநாயக அமைப்புகளை சிதைப்பது, அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துதல், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், தலித்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர்,  பொது பிரிவினர் என யாருக்காகவும் எந்த வேலையும் செய்யாதவர்களுக்கு எதிராக கிடைத்துள்ள வெற்றி. எந்த மாநிலத்திலும் பாஜ இல்லை என்பதை இந்த அரையிறுதி போட்டி நிரூபித்துள்ளது. இறுதிப் போட்டியான 2019  மக்களவை தேர்தல் முடிவு எப்படி அமையும் என்பதற்கான உண்மையான ஜனநாயக குறியீடாக இந்த முடிவுகள் வெளியாகி வருகிறது. ஜனநாயகத்தில் மக்கள்தான் எப்போதுமே ‘ஆட்ட நாயகர்கள்’’ என கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறுகையில், ‘‘மக்கள் எங்களை ஆசிர்வதித்துள்ளனர். ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசத்தில் வெற்றியை நோக்கி காங்கிரஸ் நடைப்போட்டு வருகிறது. வரும்  காலத்தின் நாட்டின் பிற பகுதிகளிலும் இந்த வெற்றி நடை தொடரும்.  ராஜஸ்தானில் யார் முதல்வர் என்பதை ராகுல் காந்தி முடிவு செய்வார். மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டது பாஜ. இதே நாளில் ஓராண்டுக்கு  முன்பு காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்றார். இன்றைய தினம் இந்த வெற்றியை விட அவருக்கு எது நல்ல பரிசாக இருந்துவிட முடியும்’’ என்றார்.காங்கிரஸ் தலைவர் ஜோதிர்ராதித்யா சிந்தியா கூறுகையில், ‘‘மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன’’ என்றார்.

மத்திய அமைச்சர் பத் நாயக் கூறுகையில், ‘‘5 மாநில தேர்தல் முடிவானது, அந்தந்த மாநில விவகாரங்கள் தொடர்பாக மக்கள் அளித்துள்ள தீர்ப்பு. இது மோடி அரசின் செயல்பாட்டுக்கு கிடைத்துள்ள முடிவல்ல’’ என்றார்.மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘‘மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம். வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். தெலங்கானாவில் மெகா கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது’’ என்றார்.

இன்று மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார் சந்திரசேகர ராவ்

119 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் ஆட்சி அமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போதைய நிலவரப்படி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 85 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 20  இடங்களிலும், பாஜ 2 இடங்களிலும் மற்றும் மற்றவர்கள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.பெரும்பான்மையை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், மீண்டும் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் அவர் மீண்டும் முதல்வராக  பதவியேற்கிறார். இதையொட்டி, அனைத்து வெற்றி பெற்ற அனைத்து எம்எல்ஏ.க்களும் இன்று ஐதராபாத் வரவேண்டும் என்று ராஷ்டிரிய சமிதி கடசி உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: