தர்மபுரி அருகே நடுரோட்டில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்து நாசம்

தர்மபுரி : தர்மபுரி அருகே ஆம்னி சொகுசு பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. அதிலிருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மதுரையில் இருந்து பெங்களூருக்கு, தனியார் ஆம்னி சொகுசு பஸ் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு புறப்பட்டது. பஸ்சில் 36 பயணிகள் இருந்தனர். அந்த பஸ் சேலம் வந்தடைந்ததும், மாற்று டிரைவரான சேலத்தை சேர்ந்த மாதேஸ்வரன் (50) பெங்களூருக்கு ஓட்டிச்சென்றார். சேலம்-பெங்களூரு பைபாஸ் சாலையில், தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோயில் அருகே நேற்று அதிகாலை 5 மணியளவில் பஸ் சென்றபோது பின்னால் உள்ள ஏ.சி மிஷினிலிருந்து தீப்பொறி கிளம்பியது. பின்னால் வந்த வாகன ஓட்டிகள் தீப்பொறி வருவதை டிரைவரிடம் கூறினர். பதறிப்போன டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். தூங்கி ெகாண்டிருந்த பயணிகள் அனைவரையும் சத்தம் போட்டு எழுப்பி அவசர அவசரமாக கீழே இறங்க வைத்தார்.

பஸ்சில் இருந்த தண்ணீரை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் டிரைவரும், பயணிகளும் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளும், தங்களிடம் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்க உதவினர். இதுகுறித்து தகவல் அறிந்த தர்மபுரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர், மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே பஸ்சின் பின்பகுதியில் ஓரளவு தீக்கிரையாகியிருந்த நிலையில், அடுத்த ஒரு சில நிமிடங்களில் ஏசியில் இருந்து காஸ் லீக்காகி, பஸ் முழுவதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. தகவலறிந்து மீண்டும் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. நேற்று அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: