அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

சென்னை: சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மக்கள் விழிப்புணர்வு மையத்தில், சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் இரா.மனோகர் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் வாழ்த்தரங்கம் நடந்தது. இதில் முன்னாள் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில பொது செயலாளர் நிஜாம், மாவட்ட தலைவர் ஜெயினுல்லாபுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது, பீட்டர் அல்போன்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு காவிரி நதிநீர் ஆணையம் அமைத்த பிறகு காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசு ஆணையத்திற்கு தெரிவிக்காமல் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது. ஆனால் தற்போது காவிரியில் மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அணை கட்ட மத்திய நீர்வளத்துறை அனுமதியளித்துள்ளது.

மேகதாதுவில் அணை கட்ட அனுமதியளித்த அதிகாரியே உச்ச நீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்ட காவிரி நதிநீர் ஆணைய தலைவராக இருப்பதும் மத்திய பாஜ அரசின் தமிழகத்தை வஞ்சிக்கும் செயலை காட்டுகிறது. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு எதிர்கட்சிகளை ஒன்றாக இணைத்து ஒரே குரலாக பேசி வருகிறது. ஆனால் தமிழகத்தில் சட்டமன்றத்தில் உள்ள எதிர்கட்சிகள் மற்றும் அனைத்து கட்சிகளையும் ஒன்றாக இணைத்து மேகதாது அணை விவகாரத்திற்கு எதிராக தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்காகவே தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு எதிராக தமிழக எம்பிக்கள் யாரும் செயல்படக்கூடாது என்பதற்காகவே மாதந்தோறும் தமிழக அமைச்சர்கள் மீது சிபிஐ சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: