‘சஞ்சாரம்’ என்ற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

புதுடெல்லி: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணர் ஊரைச் சேர்ந்தவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். ஆங்கில இலக்கியம் கற்ற அவர், கல்லுரி நாட்களில் எழுதத் தொடங்கினார். ஆனந்த விகடனில் இவர் எழுதிய ‘துணையெழுத்து’ என்ற தொடர் பரவலாக பேசப்பட்டது. பின்னர், கதாவிலாசம், தேசாந்திரி கேள்விக்குறி என்று வெளியான பத்திகள் அவருக்கு தமிழ் எழுத்துலகில் தனி அடையாளத்தை அளித்தது. இவர், கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை பற்றி பேசும் ‘சஞ்சாரம்’ நாவலை எழுதியுள்ளார். இதற்கு, இலக்கிய உலகின் மிக உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘‘எனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சி. நாதஸ்வர கலைஞர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடி ‘சஞ்சாரம்’ நாவலை எழுதினேன். அதை எழுத ஒன்றரை ஆண்டுகளானது’’ என்றார். இந்த விருதை பெற்றதற்காக அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எழுத்தாளர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: