மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்கு முதல் நபராக நிலம் கொடுத்தார் ஜெர்மனியில் வசிக்கும் மூதாட்டி

புதுடெல்லி: ஜெர்மனியில் வசிக்கும் குஜராத் மூதாட்டி, மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்கு முதல் நபராக தனது 11.97 ஹெக்டேர் நிலத்தை கொடுத்துள்ளார். மும்பை-அகமதாபாத் இடையே 508 கி.மீ தூரத்துக்கு புல்லட் ரயில் பாதை அமைக்க குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் 1,400 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இவற்றில் 1,120 ஹெக்டேர் நிலம் தனியாரிடம் உள்ளது. இவற்றை கையகப்படுத்த 6 ஆயிரம் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது. நிலத்தை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை சமாதானப்படுத்த தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் முகாம்கள் நடத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இத்திட்டத்துக்கு மும்பையில் இதுவரை 0.09 சதவீத நிலம் மட்டும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், குஜராத் சன்சாத் கிராமத்தைச் சேர்ந்த சவிதா பென் என்ற 80 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டி, தனது குடும்பத்துக்கு சொந்தமான 71 ஏக்கர் நிலத்தில், சுமார் 30 ஏக்கர் நிலத்தை ரயில்வேக்கு ரூ.30,234.3 க்கு கொடுத்துள்ளார். இவர் ஜெர்மனியில் தனது மகனுடன் சேர்ந்து இந்திய ஓட்டல் நடத்தி வருகிறார்.  33 ஆண்டுகளுக்கு முன் இவர் ஜெர்மனி சென்றார். இந்த நிலத்தை ஒப்படைப்பதற்காக இவர் ஜெர்மனியில் இருந்து இந்தியா வந்து சென்றார். இதன் மூலம், புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் வழங்கிய முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாக தேசிய அதிவேக ரயில் கார்பரேஷன் செய்தி தொடர்பாளர் தனன் ஜெயகுமார் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: