மும்பை தாக்குதல் குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கப்படும் : அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்க்டன் : மும்பை தாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தடை விதிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ல் கடல் வழியாக ஊடுருவி மும்பையில் நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். 4 நாட்கள் வரை மும்பையின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட 166 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான்.

இந்நிலையில் மும்பை நட்சத்திர விடுதி, ரயில்நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இது குறித்து பேசியுள்ள அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட 6 அமெரிக்கர்கள் மற்றும் இந்தியர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மும்பை தாக்குதல் நடைபெற்று 10 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அதற்கு திட்டமிட்ட சதிகாரர்கள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படாமல் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அட்டூழியத்தை செய்த லஷ்கர் - இ - தொய்பா உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் குறிப்பாக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மைக் பாம்பியோ வலியுறுத்தி உள்ளார். மேலும் மும்பை தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கைது செய்வதற்கு தகவல் கொடுப்பவர்களுக்கு 35 கோடியே 21 லட்சத்து 75,000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்றும் மைக் பாம்பியோ கூறியுள்ளார். மும்பை தாக்குதலுக்கு சதி செய்த அதில் ஈடுபட்ட மற்றும் தாக்குதல்களுக்கு உதவியவர்களை உலகின் எந்த மூலையிலும் கைது செய்யவோ அல்லது சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதற்கு உதவும் வகையிலோ தகவல் அளிப்போருக்கு 35 கோடி ரூபாய் சன்மானமாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: