நொகனூரில் முகாமிட்டிருந்த 40 யானைகள் ஜவளகிரி வனத்துக்குள் விரட்டியடிப்பு

தேன்கனிக்கோட்டை: கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்தன. அவை கிராமங்களுக்குள் புகுந்து ராகி, துவரை, அவரை, சோளப்பயிர்களையும், தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், வாழை தோட்டங்களில் புகுந்து பயிர்களையும் நாசம் செய்து வருகின்றன. ஓசூர் அருகே சானமாவு பகுதியில் முகாமிட்டிருந்த 40 யானைகளையும், கடந்த 21ம் தேதி வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர்.

சில தினங்களுக்கு முன் அந்த யானைகள், பேவநத்தம் வனப்பகுதியை ஒட்டிய சூரப்பன்குட்டை பகுதியில் முகாமிட்டிருந்தது. அவற்றை தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான வனவர்கள் கதிரவன், முருகேசன் மற்றும் 20 பேர் கொண்ட குழுவினர் பட்டாசு வெடித்து விரட்டினர். திம்மசந்திரம், மாரசந்திரம், லக்கசந்திரம், சீனிவாசபுரம், பூதுகோட்டை, மரகட்டா ஆகிய கிராமங்கள் வழியாக வந்த யானை கூட்டம், பயிர்களை சேதப்படுத்தி விட்டு மரகட்டா நொகனூர் காட்டிற்குள் சென்றது. பின்னர் சாலையை கடந்து ஆலல்லி காட்டிற்குள் சென்று விட்டன.

நேற்று மாலை நொகனூர் சுற்றுவட்டார பகுதியில் திரிந்த 40 யானைகளையும், வனத்துறையினர் 12 மணி நேரமாக போராடி, நேற்று அதிகாலை ஜவளகிரி வனப்பகுதிக்குள் விரட்டினர். அப்போது பாலதோட்டனப்பள்ளி, அகலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ராகி, சோளம், நெல் உள்ளிட்ட பயிர்களை யானைகள் நாசம் செய்தன. ஏற்கனவே ஜவளகிரி காட்டில் 30 யானைகள் முகாமிட்டுள்ளன. தற்போது 40 யானைகள் அங்கு விரட்டப்பட்டு உள்ளதால், யானைகள் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது. இந்த யானைகள் மீண்டும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு திரும்பி விடாமல் இருக்க, மாவட்ட வன அலுவலர் தீபக்பில்ஜி தலைமையிலான வன ஊழியர்கள் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: