கோட்டூர் அருகே புயல் நிவாரண முகாமில் காய்ச்சலுக்கு 2 பேர் பலி

மன்னார்குடி: கோட்டூர் அருகே  புயல் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 2 பேர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர். கஜா புயல் பாதிப்பால் திருவாரூர், நாகை, புதுகையில் சுமார் 1.50 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு மருத்துவ வசதிகள் குறைவான அளவில் உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் கோமளப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பேரிடர் மீட்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 500 பேர் உள்ளனர். முகாமில் அடிப்படை மருத்துவ வசதி இல்லை.

இந்நிலையில் முகாமில் தங்கியிருந்த ராஜகோபால் மனைவி பக்கிரியம்மாள் (75)  கடந்த 3 நாட்களாக கடும் காய்ச்சலில் இருந்துள்ளார். மருத்துவ வசதி இல்லாததால் இவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதன்காரணமாக  பக்கிரியம்மாள் நேற்று காலை இறந்தார். இதேபோல் மேலபனையூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பேரிடர் மீட்பு முகாமில் வைஜெயந்திரன் (41)  தங்கியிருந்தார். இம்முகாமில் 400 பேர் உள்ளனர். முகாமில் வைஜெயந்திரனுக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் இவரை உறவினர்கள் முகாமுக்கு  அருகில் இருந்த ஒரு  வீட்டில் சிகிச்சைக்காக  தங்க வைத்துள்ளனர். சிகிச்சை பலனளிக்காமல்  வைஜெயந்திரன் உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: