உகாண்டாவில் உல்லாசப் படகு ஏரியில் கவிழ்ந்து விபத்து: 29 பேர் பலி...பலர் மாயம்

கம்பாலா:  உகாண்டா நாட்டில் உல்லாசப் படகு ஏரியில் கவிழ்ந்த விபத்தில் 29 பேர் பலி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நாட்டின் தலைநகரான கம்பாலாவின் அருகாமையில் உள்ள முக்கோனோ மாவட்டத்தை ஒட்டியுள்ள விக்டோரியா ஏரியில் நேற்று சுமார் 100 பேருடன் ஒரு உல்லாசப் படகு சென்று கொண்டிருந்தது. வார இறுதிநாள் என்பதால் அந்த படகில் இருந்த அனைவரும் மது போதையில் பாடல் இசைக்கேற்ப நடனடமாடியபடி உல்லாசத்தில் மூழ்கி இருந்தனர்.  இந்நிலையில் எதிர்பாராத விதமாக பலத்த காற்று வீசியதால் அந்தப் படகு நிலைதடுமாறி, ஏரியில் கவிழ்ந்தது. படகில் இருந்த அனைவரும் போதையில் செய்வதறியாது தத்தளித்தனர். இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்பு படையினர் சிலரை உயிருடன் மீட்டனர்.

 இந்த விபத்தில் உயிரிழந்த 29 பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல்போன சிலரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள உகாண்டா, கென்யா மற்றும் தான்சானியா நாடுகளை இணைக்கும் வகையில் உள்ள விக்டோரியா ஏரி சுமார் 70 ஆயிரம் சதுர கிலோமீட்டரில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் அடிக்கடி படகு விபத்துகள் நடப்பதுண்டு. நேற்று நடந்த இந்த விபத்தில் சிக்கிய படகு வாரந்தோறும் மது விருந்துக்கு என்று வாடகைக்கு விடப்படும் படகு என தெரியவந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: