மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் 13வது பட்டமளிப்பு விழா

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரி நிறுவன தலைவர் ஏ.சீனிவாசன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வி.சேகர் வரவேற்றார். செயலாளர் நீல்ராஜ்  முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை ஹெக்ஸ்வேர் டெக்னாலஜிஸ் துணைத்தலைவர் ஸ்டான்லி ஜார்ஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடத்தில் பல்வேறு பிரிவுகளில் பயின்ற 543 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:

 நாட்டில் 15 ஆண்டுகளில் நடந்த மாற்றங்கள் கடந்த 2 ஆண்டுகளில் நடந்துள்ளன.  குறிப்பாக பொறியியல் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக வலைதளங்கள், சோஷியல் மீடியா தேவைக்கு மட்டுமே மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.  எனவே, மாணவர்கள் புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.

நல்ல புத்தகங்கள் படிப்பதன் மூலமே வாழ்வியல் அறிவைப் பெறமுடியும்.  கழுகு பெரிய மலைப்பகுதிகளில் மட்டுமே கூடுகட்டி குஞ்சு பொறிக்கும். ஆறுமாதம் தன் குஞ்சுக்கு இரைதேடித் தரும் கழுகு பின்பு அங்கிருந்து குஞ்சு கழுகை தள்ளிவிட்டு விடும். அதன்பிறகே அந்த குஞ்சு பறவை தன்னால் பறக்க முடியும் என்பதை உணர்ந்து பறக்கத் தொடங்கும். அதுபோல பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்கள் சிறகை விரித்து உலகத்தில் உயர்ந்து பறக்க வேண்டும்.ஜப்பான் என்றவுடன் பலருக்கும் எலக்ட்ரானிக்ஸ் துறைதான் நினைவுக்கு வரும். ஆனால் ஜப்பானின் முதன்மைத் தொழில் மீன்பிடித் தொழில்தான் என்பது பலரும் அறியாத ஒன்று. ஜப்பானில் ஒருமுறை மீன்பிடித் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டபோது ஒரு சிறுவன் அளித்த ஆலோசனையின் பேரில் படகில் தொட்டி கட்டி அதில் மீனைக் கொண்டு வந்தனர். அதில் மீனைக் கொண்டுவந்தபோது மீன்கள் சோர்வடைந்து இருந்ததால் அதிலும் திருப்தி அடையாமல் பின்னர் அதில்  சுறாமீனைப் போட்டுக் கொண்டு வந்தனர். இதனால் மீன்பிடித்து கொண்டுவரும்போது சுறாமீன் விழுங்கிவிடும் என்ற பயத்தில்  மீன்கள் சுற்றிவந்ததில் ஆரோக்கியமாக இருந்தன. இதனால் மீன்பிடித்தொழில் மீண்டும் கொடிகட்டிப் பறந்தது.  எனவே, மாணவர்கள் எப்போதும் சுறுசுறுப்புடனும் புதிய யுக்திகளை கையாளும் விதத்திலும் தங்களை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.  இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: