பஞ்சாப் பதான்கோட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக 6 பேர் நடமாட்டம் : போலீசார் தேடுதல் வேட்டை

சண்டிகர்,: பஞ்சாப் மாநிலம் பதான்கோட் பகுதியில் சந்தேக நபர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான படைதளத்தில் கடந்த 2016 ஜனவரி 2ம் தேதி தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் மற்றும் 6 தீவிரவாதிகள் பலியாகினர். இதேபோல் அமிர்தசரசில் கடந்த 18ம் தேதி வழிபாட்டு தலம் ஒன்றின் மீது மர்மநபர்கள் குண்டு வீசியதில் 3 பேர் பலியாகினர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பதான்கோட் மாவட்டத்தில் உள்ள சாடிபூர் கிராமத்தில் மர்மநபர்கள் 6 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் பைகளுடன் நடமாடுவதாக அப்பகுதி விவசாயி போலீசுக்கு தெரிவித்தார். இதையடுத்து  நேற்று முன்தினம் அப்பகுதி கரும்பு தோட்டங்களில் மர்மநபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக யாரும் நடமாடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக பதான்கோட் எஸ்பி விவேக் ஷீல் சோனி தெரிவித்தார்.  இதற்கிடையே பதான்கோட் அருகே உள்ள முதி கிராமத்தில் கேட்பாரற்று நின்றிருந்த கார் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். காஷ்மீர் மாநில பதிவு எண் கொண்ட அந்த காரில் கடத்தல்காரர்கள் வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள் நடத்திய விசாரணையில் காரில் வந்த 4 பேரும் கொலியன், உஜ் ஆகிய 2  சோதனைச் சாவடிகளை கடக்க  பயந்து காரை முதி பகுதியில் விட்டுச்சென்றுள்ளனர்.  அந்த காரில் சந்தேகத்திற்கு இடமான எந்த பொருளும் இல்லை. இதையடுத்து காஷ்மீரைச் சேர்ந்த கார் உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடத்தினர். மேலும், மாவட்ட எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: