சபரிமலையில் சரண கோஷம் போட போலீஸ் தடை: பக்தர்கள் கடும் கொந்தளிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில், போலீஸ் கெடுபிடி கடுமையாக உயர்ந்துள்ளது. பக்தர்க ளின் அமைதியான போராட்டத்தை தடுக்க சரண கோஷம் போட வும் போலீசார் தடை விதித்துள்ளது கடும் எதி ர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து பலத்த பாதுகாப்பையும் மீறி கடந்த நாட்களில் பக்தர்கள் போராட்டம் நடத்தினர். ஏற்கனவே கடந்த 16ம் தேதி முதல் சபரிமலையில் 2 ஐஜிக்கள், 4 எஸ்பிக்கள் தலைமையில் 5200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  சன்னிதானத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் இரவு 18ம் படி அருகே நாம ஜெப ேபாராட்டம் நடத்திய 69 பேர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவும் 18ம் படி அருகே பக்தர்கள் ேபாராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சபரிமலையில் நீடித்து வரும் போராட்டத்தையடுத்து போலீஸ் பாதுகாப்பை மேலும் தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல கட்டங்களாக மொத்தம் 35 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தரிசனத்திற்கு 6 மணி நேர கெடு: சபரிமலை  சென்றால் 6 மணி நேரத்தில் திரும்பிவிட வேண்டுமென்று பக்தர்களுக்கு போலீசார்  புதிய கட்டுப்பாடு விதித்துள்ளனர். நிலக்கல் வரும் பக்தர்களுக்கு இது  தொடர்பாக நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.   இதனிடையே சபரிமலையில் நேற்று மனித உரிமை ஆணைய தலைவர் மோகன்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். பாஜ எம்பிக்களான முரளிதரன், நளின்குமார் கட்டீல் ஆகியோரும் நேற்று நிலக்கல், பம்பை ஆகிய இடங்களை பார்வையிட்டனர். இன்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலை செல்கிறார். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு கோவில் வளாகத்தில் 8 பக்தர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர தம்பதி சிறைபிடிப்பு

நேற்று மதியம் பம்பை செல்லும் பஸ்சில் ஒரு இளம்பெண் வருவதாக தகவல் பரவியது. இதையடுத்து எரிமேலி பஸ் நிலையத்தில் இந்து அமைப்பினர் திரண்டனர். அந்த பஸ் வந்ததும் அதிலிருந்து ஒரு இளம்பெண்ணும், அவரது கணவரும் இறங்கினர். அவர்கள் சபரிமலைக்கு செல்ல இருப்பதாக கருதி இருவரையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி னர். தகவல் அறிந்து  போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த நீலிமா மற்றும் அவரது கணவர் கிரண்குமார் என தெரியவந்தது. கேரளாவில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்ய வந்துள்ளதாகவும், எரிமேலி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு செங்கணூர் கோயிலுக்கு செல்ல இருப்பதாகவும், சபரிமலைக்கு செல்லவில்லை என கூறினர். இதையடுத்து போலீசார் அவர்களை செங்கணூர் பஸ்சில் அனுப்பி வைத்தனர்.

பக்தர்களை போலீசார் சாமி என்று அழைக்கலாம்

டிஜிபி லோக்நாத் பெக்ரா  கூறியது: பக்தர்களை சாமி என அழைக்க கூடாது என உத்தரவிடவில்லை. கோயில் வளாகம், மாளிகைபுரம், 18ம் படி ஆகிய இடங்களில் பணியாற்றும் போலீசார் தவிர மற்ற இடங்களில் பணியாற்றும் போலீசார் ஷூ, பெல்ட், ெதாப்பி அணிய வேண்டும். பக்தர்களை சாமி என அழைப்பதில் தவறில்லை என்றார்.

சபரிமலையை கைப்பற்ற அனுமதிக்கமாட்டோம்

திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் நேற்று நிருபர்களிடம் கூறியது: ஆர்எஸ்எஸ், சங்பரிவார் போன்ற அமைப்பினர் தங்களது அரசியல் லாபத்துக்காக சபரிமலையை பயன்படுத்துகின்றனர். ஆச்சாரத்தை கடைபிடிப்பதாக கூறும் அவர்களே ஆச்சாரத்தை மீறி நடக்கின்றனர். சபரிமலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே அவர்கள் முயற்சிக்கின்றனர். அவர்களது திட்டம் நிறைவேறாது.

சபரிமலையில் உண்மையான பக்தர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. பக்தர்கள் போர்வையில் வந்து போராட்டத்தில் ஈடுபடும் ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்பினரைத்தான் போலீசார் கைது செய்கின்றனர். மேலும் வதந்திகளை பரப்புவதில் ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன. போலீசார் பக்தர்களை தாக்குவது போன்ற படங்களை தவறாக சித்தரித்து பரப்புகின்றனர். இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தடையை மீறி காங். போராட்டம்

எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, முன்னாள் அமைச்சர்களும் எம்எல்ஏக்களுமான முனீர், பி.ஜெ. ஜோசப், பிரேமச்சந்திரன் எம்.பி மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் நேற்று நிலக்கல் சென்றனர். அவர்களை போலீசார் பம்பைக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து அங்கேயே போராட்டம் நடத்தினர். எம்எல்ஏக்கள் மட்டும் தங்களது வாகனங்களில் பம்பை செல்லலாம் என்றும், மற்றவர்களை அனுமதிக்க முடியாது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்க மறுத்தனர். பின்னர் அனைவரும் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பஸ்சில் புறப்பட்டனர். பம்பையிலும் தடையை மீறி அவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, ரமேஷ் சென்னித்தலா கூறுகையில், சபரிமலையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை பாதியாக குறைந்துள்ளது. எனவே இந்த தடையை நீக்க கோரி தடையை மீறி போராட்டம் நடத்துகிறோம். போலீசார் எங்களை கைது செய்யாததால் நாங்கள் திரும்பி செல்கிறோம் என்றார்.

அமெரிக்காவில் போராட்டம்

சபரிமலையில் ஆச்சாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி, இந்துக்கள் அமெரிக்காவில் போராட்டம் நடத்தினர். நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். அப்போது சபரிமலையை பாதுகாக்க வலியுறுத்தியும், இந்து விரோத போக்கை கடைப்பிடிக்கும்  பினராயி விஜயன் தலைமையிலான கேரளா கம்யூனிஸ்ட் அரசை கண்டிக்கும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:

1. பக்தர்கள் குழுவாக கோயில் வளாகத்தில் நிற்கவோ, அமரவோ கூடாது.

2. சரண கோஷங்களை இடக்கூடாது.

3. ஊடகங்களிடம் பேசக்கூடாது.

4. ஆறு மணிநேரத்துக்கு மேல் கோயில் வளாகத்தில் தங்கியிருக்கக்கூடாது.

5. ஆறு மணி நேரத்துக்கு பின்னர் கோயிலை விட்டு வெளியேறுவதுடன், போலீசாரிடம் அதை உறுதிப்படுத்த வேண்டும்.

6. இவற்றை கடைப்பிடிக்காவிட்டால், உங்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: