3 லட்சம் வீடுகள் பயன்பெறும் சேலத்தில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு : 2 ஆயிரம் கோடி திட்டம் நாளை தொடக்கம்

சேலம் : சேலத்தில் 3 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் 2 ஆயிரம் கோடியில் நாளை தொடங்கவுள்ளதாக ஐஓசி தென் மண்டல பொதுமேலாளர் சபிதா நட்ராஜ் கூறினார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனத்தின் தென் மண்டல பொதுமேலாளர் சபிதா நட்ராஜ் சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இயற்கை எரிவாயு உபயோகத்தை விரிவு படுத்தும் நகர எரிவாயு விநியோக திட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்தி வருகிறது. இதன்படி, நாளை (22ம் தேதி) நாடு முழுவதும் 129 மாவட்டங்களில் மலிவான இயற்கை எரிவாயு விநியோக திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங்கில் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் இத்திட்டத்தை சேலம், கோவை நகரங்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) வழங்க உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் எம்பி பன்னீர்செல்வம், எம்எல்ஏ வெங்கடாசலம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த மலிவான இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு சென்னை எண்ணூர் மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சேமிப்பு மையத்தில் இருந்து சேலத்திற்கு இயற்கை எரிவாயு, குழாய்கள் மூலம் எடுத்து வரப்படுகிறது.

 இங்கு, மாவட்டம் முழுவதும் மொத்தமுள்ள 9.8 லட்சம் வீட்டு சிலிண்டர் இணைப்புகளில் 3 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு வழங்க திட்டமிட்டுள்ளோம். அதேபோல், பெரிய தொழிற்சாலைகள், ஓட்டல் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் வாகனங்களுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கப்படும்.

2 ஆயிரம் கோடியில் சேலத்தில் செயல்பாட்டிற்கு வரும் இத்திட்டதை, 8 ஆண்டுகளில் முழுமையாக நிறைவு செய்வோம். இதற்காக மாவட்டம் முழுவதும் 158 ஸ்டேஷன்கள் ஏற்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக ஸ்டேஷன் அமைக்க சர்வே பணி நடக்கும். தொடர்ந்து படிப்படியாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படும். வீடுகளில் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதன் மூலம் அதிக செலவு ஏற்படாது. விபத்து அபாயமும் கிடையாது. நேரடியாக உபயோகிக்கும் இயற்கை எரிவாயுக்கான கட்டணத்தை மாதந்தோறும் செலுத்தலாம். இணைப்பு வழங்கப்படும் வீடுகளில் தனியாக மீட்டர் பொருத்தப்பட்டு இருக்கும். தற்ேபாதுள்ள மானியமில்லா சிலிண்டரின் விலையை விட 40 சதவீதம் குறைவாகவும், பெட்ரோலை விட 60 சதவீதம் குறைவாகவும், டீசலைவிட 45 சதவீதம் குறைவாகவும், இந்த இயற்கை எரிவாயுவின் விலை இருக்கும். இவ்வாறு பொதுமேலாளர் சபிதா நட்ராஜ் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: