வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: மத்திய தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்தமானது இன்று மாலை புதுவையை நெருங்கும் எனவும் அதன்பின்பு நாகை - வேதாரண்யம் இடையே நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளையும் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே தென்மேற்கு வங்கக்கடல், மன்னார்வளைகுடா பகுதிக்கு இன்றும், நாளையும் மீனவர்கள் செல்லவேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னையை பொறுத்த வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மாங்குடி, புலிவலம், விளமல் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்தது.

மேலும் நாகை மாவட்டம் சீர்காழி, கோடியக்கரை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பாம்பன், பாபநாசம், திருசெந்தூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பதிவானது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: