தேன்கனிக்கோட்டை வனத்திற்கு விரட்டிய வேகத்திலேயே திரும்பிய யானைகள்: ராகி, சோளப்பயிர்களை அழித்து அட்டகாசம்

தேன்கனிக்கோட்டை: ஓசூர் சானமாவு வனப்பகுதியில் அட்டகாசம் செய்த 50 யானைகளை, தேன்கனிக்கோட்டை வனத்திற்கு விரட்டிய வேகத்திலேயே, அந்த யானைகள் சானமாவுக்கு திரும்பியுள்ளன.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு பயிர்களை நாசம் செய்து வந்த 50 யானைகளை வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர். அதன்பின் பேவநத்தம் வனத்தில், சிவநஞ்சுண்டேஸ்வரன் மலைப்பகுதியில் முகாமிட்டிருந்த  யானைகளை விரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் அவற்றை பட்டாசு வெடித்து மரகட்டா காட்டிற்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர். இதனிடையே, நேற்று முன்தினம் இரவில் 50 யானைகளும் பல பிரிவுகளாக பிரிந்து கோட்டட்டி, லட்சுமிபுரம், புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்தன. பின்னர், அங்குள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்து தக்காளி, ராகி, சோளப்பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்தன. பின்னர், அந்த யானைகள் அனைத்தும் பேவநத்தம் காட்டிற்குள் ஓட்டம் பிடித்து, சிவநஞ்சுண்டேஸ்வரன் மலை அடிவாரத்தில் உள்ள வட்டவடிவ பாறை, சூரப்பன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் தஞ்சம் புகுந்தன.

கர்நாடக வனப்பகுதியில் இருந்து மேலும் 20 யானைகள் ஜவளகிரி வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளன. நேற்று அதிகாலை பாலதோட்டனப்பள்ளியில் யானைகள் சுற்றித்திரிவதை கண்ட கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஏற்கனவே ஜவளகிரி வனப்பகுதியிலிருந்து வந்த 13 யானைகள் கோணிப்பள்ளம் பகுதியில் முகாமிட்டுள்ளன. தற்போதைய சூழலில், 100க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் பீதிக்குள்ளாகியுள்ளனர். சானமாவு அருகே பேவநத்தம் பகுதியில் முகாமிட்டுள்ள 50 யானைகளையும், பாலதோட்டனப்பள்ளியில் முகாமிட்டிருந்த 20 யானைகளையும், ஜவளகிரி காப்புகாட்டுக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: