கஜா புயலால் தனித்தீவாக மாறியிருந்த வேதாரண்யத்தில் கடும் சேதம்: அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் மக்கள் பெரும் அவதி

வேதாரண்யம்: கஜா புயலால் தனித்தீவாக மாறியிருந்த வேதாரண்யத்தில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடலோர மாவட்டங்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்திய கஜா புயல், நேற்று நள்ளிரவு மிகப்பெரிய கோரத்தாண்டவத்தை ஆடியுள்ளது. வேதாரண்யம் அருகே கரையை கடக்கும்போது மிகப்பெரிய சேதத்தை அப்பகுதி சந்திக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. வானிலை மையத்தின் எச்சரிக்கையை விட அதிகமான சேதத்தை வேதாரண்யம் சந்தித்துள்ளது.

alignment=

ஏறக்குறைய 10 மணி நேரத்திற்கு மேலாக வேதாரண்யத்தில் தொடர்பு கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், அங்கு புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளின் முதல் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. வேதாரண்யத்தில் உள்ள பல்வேறு குக்கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்ட்டுள்ளன. குறிப்பாக வண்டல் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் அழிந்துபோயுள்ளன. சூறைக்காற்று வீசியதால் கூரை மற்றும் ஓடு வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வேதாரண்ய மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருந்தாலும், குக்கிராமங்களில் உள்ளவர்களில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

alignment=

ஆனால் அந்த கிராமங்களுக்கு அரசு அதிகாரிகளாலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மக்களை அதிகாரிகள் சந்திப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வேதாரண்யம் முழுவதும் தகவல் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. சுமார் 3 லட்சத்துக்கும் மேலான மரங்கள் சாய்ந்துள்ளன. தகவல் தொடர்பு துண்டிப்பால் குக்கிராமங்களில் உள்ள மக்களை தொடர்பு கொள்வதிலும், அவர்கள் அதிகாரிகளை தொடர்புகொள்வதிலும் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது.
alignment=

வேதராண்யம் புதிய பேருந்து நிலையம் முற்றிலுமாக சிதிலமடைந்துள்ளது. வட்டாட்சியர் அலுவலக சுவர் இடிந்து விழுந்துள்ளது. 3 லட்சம் டன் கணக்கில் தேக்கி வைக்கப்பட்டிருந்து உப்பு உற்பத்தியும் முற்றிலும் சேதமடைந்துள்ளது. உப்பு தயாரிக்கும் ஸ்தளம் அனைத்தும் மழைநீரில் மூழ்கியுள்ளது. முன்னேற்பாடுகளை அரசு செய்திருந்தாலும் முகாம்களில் உள்ள மக்களுக்கு சரியான நேரத்தில் உணவு கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் சேதத்தை முழுமையாக கணக்கிடவே ஒரு வார காலம் ஆகும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: