அரசு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 809 கணினி ஆசிரியர் பணியிடங்களை முதலில் தற்காலிகமாகவும், நடப்புக் கல்வியாண்டு முடிவதற்குள் நிரந்தரமாகவும் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழகத்தில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில், 750 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்களே நியமிக்கப்படவில்லை. நிலைமை இப்படி இருக்க கணினி அறிவியல்பாடத்திற்கு தேர்வுகளை நடத்துவதன் மூலம் பினாமி அரசு புதிய கல்விப் புரட்சி படைப்பதாக எள்ளி நகையாடியுள்ளார்.

மாணவர்களின் கல்வித்தேவையை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளாவது மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்தால் தான் தரம் உயர்த்தப்பட்டது அர்த்தமுள்ளதாக அமையும். ஆனால், அரசு உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப் படுவதாக பேரவையில் அறிவித்து விட்டு, அப்பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது தான் அவர்களுக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகம் ஆகும்.

கணினி அறிவியல் என்றால் என்ன என்பது கூட தெரியாமல் அப்பாடத்தின் தேர்வை எழுதும் மாணவனால் எதை சாதிக்க முடியும்? அம்மாணவன் எவ்வாறு தேர்ச்சி பெற்று உயர்கல்விக் கற்கச் செல்வான்? ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான அடிப்படைத் தேவை கல்வி ஆகும். அதனால், மாநிலத்தை முன்னேற்ற வேண்டும் என்று நினைக்கும் அரசு, மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கு  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். தமிழகத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதுகலை கணினி அறிவியல் ஆசிரியர் தகுதி பெற்று பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் நலன் கருதியும், மாணவர்கள் நலன் கருதியும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 809 கணினி ஆசிரியர் பணியிடங்களை முதலில் தற்காலிகமாகவும், நடப்புக் கல்வியாண்டு முடிவதற்குள் நிரந்தரமாகவும் அரசு நிரப்ப வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: