குரூப்-2 தேர்வு கீ-ஆன்சர் வெளியீடு; புதிய முறை அமல்; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 116 மையங்களில் குரூப்-2 ேதர்வு நடத்தியது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் இன்று இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியிடப்படும் உத்தேச விடைகளில் தவறு இருப்பின் விண்ணப்பதாரர்கள் அதனை தேர்வாணையத்திற்கு தெரிவித்து சரியான விடைகளைக் கோர முடியும். அதற்கான கோரிக்கைகள் விண்ணப்பதாரர்களிடமிருந்து இதுநாள் வரை எழுத்துப்பூர்வமாக கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டு வந்தன. அவ்வாறு பெறப்படும் கோரிக்கைகளை அட்டவணைப்படுத்தி, சீர்படுத்தி வினா எண் வாரியாக பிரித்து எடுத்து அதற்கான வலுசேர்க்கும் ஆவணங்களை நகலெடுத்து உரிய வல்லுநர் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப சுமார் ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே அத்தேர்விற்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

 எனவே, இந்த கால தாமதத்தை குறைக்க தேர்வாணையம் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி வினாத்தாள் குறித்த கோரிக்கைகள் இணைய வழியில் மட்டுமே பெறப்படும். தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே அத்தேர்வுக்குரிய உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளை கோர முடியும். தேர்வர்கள் எந்த வரிசை கேள்வித்தாளை பயன்படுத்தி விடையளித்திருந்தாலும், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி மட்டுமே தேர்வர்கள் உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளைக் கோர முடியும். விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.

பதிவு எண், விண்ணப்ப எண், ஆகிய இரண்டும் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலேயே இருக்கும். தேர்வர்கள் தேர்வு எழுதிய பாடத்தினை தேர்வு செய்து பின்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி வினா எண்-ஐ தெரிவு செய்தால் அதற்கான கேள்வி மற்றும் சரியான விடைக்குறிப்பு திரையில் தோன்றும். விடைக்குறிப்பில் விடைகளில் மாறுபட்ட கருத்து இருப்பின் அதன் கீழே தோன்றும் சரியான விடை, விடைகளை தெரிவு செய்ய வேண்டும்.  பின்னர் அதன் கீழே இருக்கும் குறிப்பு கலத்தில் தேர்வர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம். அதனைத் தொடர்ந்து தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது, அதன் ஆசிரியர், பதிப்பு வருடம், பதிப்பாளர், பக்க எண் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர், தேர்வர்கள் தெரிவித்த விடைக்கு வலுச்சேர்க்கும் உரிய ஆவணங்களை கோப்புக்களாக பதிவேற்றம் செய்யவேண்டும். தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது என்பதற்கான தகவல்களும் விடைக்கு வலுச்சேர்க்கும் உரிய ஆவணங்களும் இல்லாத கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.பதிவேற்றம் செய்தபின் அதற்கான ஒப்புகையினை உத்தேச அச்சிட்டுக்கொள்ளலாம்.

ஒருவர் எத்தனை விடைகளுக்கு வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கலாம் கையால் எழுதப்பட்ட குறிப்புகள் விடைக்கான ஆதாரமாக கருதப்பட மாட்டாது, அஞ்சல், மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது.

கடந்த 11ம் தேதி அன்று நடந்த தொகுதி-2 தேர்வுக்கான தோராயமான விடைக்குறிப்புகள் இன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விடைக்குறிப்புகளில் தவறு இருப்பின் அதற்கான கோரிக்கைகளை தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டும் வருகிற 20ம் தேதிக்குள் இதற்கென உருவாக்கப்பட்டுள்ள இணைய பக்கத்தின் மூலம் மட்டும் அனுப்பலாம். 20ம் தேதிக்கு பின்னர் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது.இவ்வாறு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: