திண்டுக்கல் ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் ரகளை: சேர்களை தூக்கி வீசியதால் பரபரப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் முன்னிலையில் நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில், கட்சியினர் சேர்களை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல் - நத்தம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நேற்று நடந்தது. மாவட்டச் செயலாளர் மருதராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மருதராஜ், தேர்தல் பணியாற்றுவது குறித்து பேசி கொண்டிருந்தபோது திடீரென தொப்பம்பட்டியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் விறுவிறுவென மேடை முன்பு வந்து கூட்டத்தை நிறுத்துமாறு  கூறி தகராறில் ஈடுபட்டனர். உடனே மருதராஜ், ‘கூட்டத்தை நிறுத்த சொல்ல நீங்கள் யார்’ என்றார்.

அதற்கு அவர்கள், ‘நாங்கள் இல்லாமல் நீங்கள் வெற்றி பெற முடியுமா’ என கேட்டனர். வாக்குவாதம் ஏற்பட்டு, நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தொப்பம்பட்டி ஒன்றியச் செயலாளர்  கிட்டுச்சாமியிடம் என்ன பிரச்னை என விசாரிக்குமாறு கூறினார்.உடனே கிட்டுச்சாமி தொண்டர்களை சமாதானப்படுத்த முயன்றார். அதற்கு அவர்கள், ‘முதலில் உன்னை மாற்ற வேண்டும். கட்சியிலிருந்தே நீக்க வேண்டும்’ என கூச்சலிட்டனர். அதில் ஒருவர், ‘‘தொப்பம்பட்டி ஒன்றியத்தில்  சத்துணவு பணிக்கான வேலை நியமனத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. கிட்டுச்சாமி கூடுதலாக தொகை வாங்கி கொண்டு மற்றவர்களுக்கு சத்துணவு வேலை கொடுத்துள்ளார். இதேபோல் கூட்டுறவு சங்க தேர்தலில் அதிக  தொகை கொடுத்தவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் உழைத்தவர்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. இப்படி செய்தால் கட்சியை எப்படி வளர்க்க முடியும்,’’ என்றனர்.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் அதிமுக நிர்வாகி ஒருவர், ‘‘நீங்கள் எல்லாம் கட்சிக்காரர்கள்தானே, பொதுஇடத்தில் இப்படி செய்யலாமா,’’ என்று கேட்டார். உடனே அவர்கள், ‘‘அமைச்சரும், மாவட்டச் செயலாளரும்  இருக்கும் இடத்தில்தான் கேள்வி கேட்க முடியும், கட்சி அலுவலகத்தில் எப்படி கேட்க முடியும்?’’ எனக்கூறி அந்த நிர்வாகியை ஓட, ஓட தர்ம அடி கொடுத்து விரட்டி, சேர்களை தூக்கி வீசினர். இதனால்  அவர் உயிருக்கு  பயந்து மண்டபத்தை விட்டு வெளியே ஒடினார். பின்னர் போலீசார் மண்டபத்திற்குள் புகுந்து தொப்பம்பட்டி அதிமுகவினரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்கள் கோஷமிட்டவாறு மண்டபத்தை விட்டு வெளியேறினர். அதிமுக  அமைச்சர், முன்னாள் அமைச்சர், மாவட்டச் செயலாளர் முன்னிலையில் சேர்களை தூக்கி வீசி கட்சியினரே ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள், இன்னாள் கோஷ்டி மோதல்

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவாளர்கள் ஒரு கோஷ்டியாகவும், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்கள் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.  பழநியில்  தீபாவளி வாழ்த்துக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் படத்தை போடாமல் பிளக்ஸ் பேனரை நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்கள் வைத்திருந்தனர். அதற்கு எதிர்ப்பாக திண்டுக்கல்லில் அமைச்சர் ஆதரவாளர்கள், நத்தம் விஸ்வநாதன் படத்தை போடாமல் பிளக்ஸ் பேனர்களை வைத்திருந்தனர். இப்படி இரு கோஷ்டிகளுக்கு இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடுகள் நிலவி  வந்தது. நேற்றைய களேபரத்துக்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: