இரட்டை சதம் விளாசினார் முஷ்பிகுர் வங்கதேசம் 522/7 டிக்ளேர்

தாக்கா: ஜிம்பாப்பே அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 522 ரன் குவித்து டிக்ளெர் செய்தது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்தது. அந்த அணி 11.1 ஓவரில் 26 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறிய நிலையில், மோமினுல் - முஷ்பிகுர் இணை 4வது விக்கெட்டுக்கு 266 ரன் சேர்த்தது. மோமினுல் 161 ரன் (247 பந்து, 19 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் வங்கதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன் எடுத்திருந்தது. முஷ்பிகுர் ரகிம் 111 ரன், கேப்டன் மகமதுல்லா (0) இருவரும் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். மகமதுல்லா 36, ஆரிபுல் ஹக் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த மெகதி ஹசன் மிராஸ் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, முஷ்பிகுர் இரட்டை சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் மிராஸ் அரை சதம் கடந்தார். வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 5212 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது (160 ஓவர்).

Advertising
Advertising

முஷ்பிகுர் 219 ரன் ( 421 பந்து, 18 பவுண்டரி, 1 சிக்சர்), மிராஸ் 68 ரன்னுடன் (102 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜிம்பாப்வே பந்துவீச்சில் ஜார்விஸ் 5, சதாரா, டிரிபானோ தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 25 ரன் எடுத்துள்ளது. கேப்டன் ஹாமில்டன் மசகட்சா 14 ரன் எடுத்து தைஜுல் இஸ்லாம் பந்துவிச்சில் மிராஸ் வசம் பிடிபட்டார். பிரையன் சாரி 10, டிரிபானோ (0) இருவரும் களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே அணி 497 ரன் பின் தங்கியுள்ள நிலையில், இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

ஷாகிப் ஹசனை முந்தினார்

* டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் விளாசிய வங்கதேச வீரர் என்ற சாதனை முஷ்பிகுர் (219*) வசமானது. அவர் ஷாகிப் அல் ஹசன் (217 ரன்) சாதனையை நேற்று முறியடித்தார்.

* இரண்டாவது முறையாக டெஸ்டில் இரட்டை சதம் விளாசியுள்ள முஷ்பிகுர், அதிக ரன் குவித்த வங்கதேச வீரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற இன்னும் 87 ரன் மட்டுமே தேவை. அவர் இதுவரை 3962 ரன் எடுத்து 2வது இடத்தில் உள்ளார். தமிம் இக்பால் 4048 ரன்னுடன் முதலிடத்தில் உள்ளார்.

* ஒரு இன்னிங்சில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வங்கதேச வீரர் என்ற சாதனையையும் முஷ்பிகுர் படைத்துள்ளார் (421 பந்து). இதற்கு முன் முகமது அஷ்ராபுல் 2013ல் இலங்கைக்கு எதிராக காலேவில் நடந்த டெஸ்டில் 417 பந்துகளை சந்தித்திருந்தார்.

* இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் முஷ்பிகுர் ரஹிமுக்கு கிடைத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: