பட்டாசுக்கு கால நிர்ணயம் மது குடிக்க காசு நிர்ணயமா? : அரசுக்கு தமிழிசை கேள்வி

சென்னை: பட்டாசு வெடிப்பதற்கு கால நிர்ணயம்,  மது குடிப்பதற்கு காசு நிர்ணயம் செய்வதா என தமிழக பாஜ தலைவர் தமிழிசை  தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.  திருவள்ளூர் மாவட்ட பா.ஜ. சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூர் தேரடியில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ் தலைமை வகித்தார். மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பொதுமக்களுக்கு கசாயம் வழங்கினார். பின்னர் நமோ செயலி மூலம் கட்சி தொண்டர்களிடம் நிதி திரட்டினார்.பின்னர் நிருபர்களிடம் தமிழிசை  கூறியதாவது: டெங்கு காய்ச்சலால்  உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் சுகாதாரத்துறை  டெங்கு நோய் தடுப்பு  நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.  டெங்கு காய்ச்சலில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ரத்தம் தேவைப்படுவதால் இளைஞர்கள் ரத்ததானம் செய்ய  முன்வர வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் ரத்தம் இருப்பு வைக்க வேண்டும்.  தமிழகம் தீபாவளி பண்டிகையை கொண்டாடியதா இல்லை, தள்ளாடியதா?  என்று தெரியவில்லை. காரணம், 3 நாட்களில் 602 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது என்றால் மனித உறுப்புகள்  எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்று மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியும். பட்டாசு வெடிப்பதற்கு கால நிர்ணயம், மது குடிப்பதற்கு காசு நிர்ணயமா?   தமிழக அரசு டாஸ்மாக் விற்பனையை வருமானத்திற்காக செய்யாமல் அதற்கு  மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.   ஏழை, எளிய மக்கள் தீபாவளிக்கு  ஆடைகள்  இனிப்புகள் வாங்கி கொண்டாட வேண்டிய பணம்    டாஸ்மாக்குக்கு  சென்றுவிட்டது. டாஸ்மாக்கை தடுக்க அரசாங்கம் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து அரசாங்க மருத்துவமனைகளில் குடிபோதை மறுவாழ்வு மையங்களை திறக்க வேண்டும். வெடிப்பதற்கு கால அவகாசம்  நிர்ணயம் செய்த உச்ச நீதிமன்றம் குடிப்பதற்கு   நேரம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும். டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை இன்னும் குறைக்க வேண்டும். பட்டாசு வெடித்ததாக போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பாஸ்கரன், கணேசன், ஆனந்தன், பிரபுதாஸ், செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: