பார்சிலோனா: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், பார்சிலோனா அணி 5-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது. பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் மோதும் கால்பந்து போட்டிகள் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம். லா லிகா சாம்பியன்ஷிப்பில் எல் கிளாசிகோ என்று பிரபலமாகி உள்ள இந்த போட்டி, பார்சிலோனாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் நிலையில், பார்சிலோனா அணிக்கு இப்போட்டி மிகப் பெரிய சவாலாக கருதப்பட்டது. எனினும், தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய அந்த அணி, இடைவேளையின்போது 2-0 என முன்னிலை வகித்ததுடன் ஆட்ட நேர முடிவில் 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.