நாடாளுமன்ற பொதுத் தேர்தலோடு தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும்: பிரேமலதா பேட்டி

சென்னை: இடைத்தேர்தல் நடத்த ஆளுங்கட்சிக்கு தைரியமில்லை. எனவே, நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மகளிர் அணி செயலாளர்கள், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு பிரேமலதா அளித்த பேட்டி: ஒவ்வொரு துறையிலும் பெண்கள் முன்னேறி உள்ளனர். மீ  டூ என்ற ஹேஷ் டேக் வேகமாக பரவி வருகிறது. இதை ஒவ்வொரு பெண்ணும் தனக்கு பயனுள்ளதாக மாற்றி கொள்ள வேண்டும். இதை சர்ச்சைக்கு ஆளாக்குவதோ? அல்லது விவாத பொருளாக்குவதோ? இல்லாமல் அதை தங்களுக்கு பயனுள்ளதாக ஆக்க வேண்டும். பெண்களை சகோதரிகளாக, நண்பர்களாக பாருங்கள். பெண்கள் ஸ்டிராங்காக இருந்தால் யாரும் பெண்களிடம் வால் ஆட்ட முடியாது. முதலில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தமிழகத்தில் வழியில்லை. இடைத்தேர்தலை நடத்துவதற்கு ஆளுங்கட்சிக்கு தைரியமில்லை.

இப்படியிருக்கும் போது அடுத்த தேர்தல் எப்போது வரப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. முதலில் தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அதுவும் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்றத்துக்கும் தேர்தலும் வரும் என்று எங்களுக்கு வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த தேர்தலில் முழு பலத்தையும் தேமுதிக காட்டும். கருணாநிதி, ஜெயலலிதா போன்ற சிங்கங்களை எதிர்த்து  போராடியவர் விஜயகாந்த். இன்று யார் யாரோ வரலாம். எத்தனை பேர் வேண்டும் என்றாலும் வரலாம். தினமும் ஒரு கட்சி வரலாம். அவர்கள்  இன்றைக்கு பூனையிடம் சண்டை போட்டு கொள்ளலாம். ஆனால் சிங்கத்தை எதிர்த்தவர் விஜயகாந்த். அதனால், பூனைகளை கண்டு தேமுதிக அஞ்ச வேண்டியது இல்லை. வயது காரணமாக விஜயகாந்துக்கு ஹெல்த் பிரச்னை வந்துள்ளது. அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார். இன்னும் 15 நாளில் அந்த வெளிநாடு பயணம் அமையும். சிசிச்சை முடிந்து அவர் சிங்கம் போல எழுந்து வருவார். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: