என்னை பார்த்து தமிழக அமைச்சர்கள் பயப்படுகிறார்கள்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், டெல்லியில் இருந்து நேற்று பகல் 12.45 மணிக்கு சென்னை திரும்பினார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தலை சந்திப்பது சம்பந்தமான ஆயத்தப் பணிகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். சினிமாவால் என்னை மக்களுக்கு நன்றாக அடையாளம் தெரியும். இந்நிலையில், மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டியலிட்டுக் கொள்வதற்காகவும், நாங்கள் கடந்து செல்லும் பாதையில் மக்களுக்கு செய்ய வேண்டிய வேலைகள் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காகவும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறேன். முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நான் சந்தித்தபோது, கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. கூட்டணி பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது.

நான் அய்யப்பன் கோயிலுக்கு இதுவரை சென்றதில்லை. மற்ற கோயில்களுக்கு சென்றிருக்கிறேன். எனவே, சபரிமலை விவகாரத்தில் என்னிடம் கருத்து கேட்பது சரியாக இருக்காது. நம் நாட்டு பெண்களுக்கு எது நல்லது என்று கேட்டால் சொல்வேன். ஆனால், பக்தர்கள் சார்பான விவகாரங்கள் எதுவும் எனக்கு தெரியாததால், அதில் நான் தலையிடாமல் இருப்பதுதான் நல்லது. எனக்கு அரசியல் செய்ய தெரியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது, அவரது கருத்தாகும். தமிழக அமைச்சர்களில் பலர், என்னை பார்த்து பயப்படுகிறார்கள். அந்த பயம் மற்றும் பதற்றத்தினால் அமைச்சர்கள் ஏதேதோ பேசுகிறார்கள். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: