ஏழ்மையை ஒழிப்பதில் முந்தைய அரசுகள் தீவிரம் காட்டவில்லை : ஷீரடியில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஷீரடி: ‘‘ஏழ்மையை ஒழிப்பதில் முந்தைய அரசுகள் தீவிரம் காட்டவில்லை. குறிப்பிட்ட ஒரு குடும்பத்தின் பெயரை ஊக்குவிப்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது’’ என ஷீரடியில் காங்கிரசை பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக தாக்கிப் பேசினார். விஜயதசமி தினத்தன்று ஷீரடி சாய்பாபா ஜீவசமாதி அடைந்தார். இதனை தொடா்ந்து ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 100வது சமாதி தினமாகும்.  இதையொட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் ஆண்டு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடந்தன. சாய்பாபா மகா சமாதி நிறைவு தினமான நேற்று சிறப்பு பூஜைகள், தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிறைவு நாள் பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று ஷீரடி சாய்பாபாவை தரிசனம் செய்தார். கோயில் அறக்கட்டளை மூலம் ரூ.475 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட உள்ள பல்வேறு பணிகளை அவர் தொடங்கி வைத்தார். மேலும், அனைவருக்கும் வீடு வழங்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை ஏழை மக்களுக்கு வழங்கினார். விழாவில் 10 பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை பிரதமர் மோடி ஒப்படைத்தார். அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் ஆட்சியில் உள்ள நாங்கள், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளை விரைவாக முடித்து மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம். குடிசையில் வாழும் ஏழைகளுக்கு முறையான வீட்டு வசதியை ஏற்படுத்தி தர கடந்த 4 ஆண்டாக தீவிரமாக பணியாற்றி வருகிறோம். கடந்த காலங்களிலும் இதுபோன்ற தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஆனால் ஏழைகளுக்கு வாழ்விடம் வழங்கி அவர்களுக்கு அதிகாரத்தை தருவதற்கு பதிலாக குறிப்பிட்ட ஒரு குடும்பத்தின் பெயரை ஊக்கப்படுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தனர் என்பது துரதிஷ்டவசமானது. வாக்கு வங்கிகளை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. எங்களின் இலக்கோ, நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், 2022ம் ஆண்டுக்குள், இந்தியாவில் வீடுல்லாத ஒருவர் கூட இருக்கக் கூடாது என்பது தான். ஏழைகளை உயர்த்த நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். எனவே அதற்கான பணிகளை விரைந்து செய்து முடிக்கிறோம். முந்தைய ஆட்சியில் அவர்களின் 4 ஆண்டு கால ஆட்சியில் 25 லட்சம் வீடுகளை மட்டுமே கட்டி கொடுத்தனர். தற்போது பாஜ அரசு 1.25 கோடி வீடுகளை கட்டித் தந்துள்ளது. முந்தைய அரசே தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் இந்த இலக்கை எட்டவே 20 ஆண்டுகள் ஆகியிருக்கும். மேலும் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டம் ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். இதே போல, தானே, நந்தர்பர், சோலாபூர், லத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற விழாவிலும் பயனாளிகளுக்கு வீட்டு சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. அவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி உரையாடினார்.

வெள்ளி நாணயம் வெளியிட்டார்

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சாய்பாபாவின் பெயர் பொறித்த வெள்ளி நாணயத்தை வெளியிட்டார். ஷீரடி கோயிலில் தரிசனத்திற்கு பின்னர் வருகைப்பதிவேட்டில் அவர் எழுதியதாவது: சாய்பாபாவை தரிசித்த பிறகு மிகுந்த மன அமைதி கிடைத்ததாக உணர்கிறேன். சாய்பாபா இந்த உலகிற்கு தந்த தகவலில் நம்பிக்கை, பொறுமையை கடைபிடிக்க கூறியதே ஒட்டுமொத்த மனிதர்களையும் கவர்ந்திழுந்தது. பல்வேறு நம்பிக்கை கொண்டவர்களும், அனைத்து  மதங்களும் சமம் என்பதற்கு ஓர் அடையாளர் ஷீரடி. நம் அனைவரையும் இயக்குவது ஒரே கடவுளே என்ற சாய்பாபாவின் கோட்பாடு இன்றைய உலக அமைதிக்கு இன்றியமையாதது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: