சூட்-பூட் அணியவில்லை என்றால் பிரதமரின் சகோதரர் ஆக முடியாது: ம.பி.யில் ராகுல் பேச்சு

தாடியா: ‘‘சூட்-பூட் அணியவில்லை என்றால், பிரதமரின் சகோதரர் ஆக முடியாது’’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசினார்.  மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இங்கு ராகுல் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். குவாலியரில் உள்ள மா பீதாம்பரா பீடம் கோயிலில் அவர் நேற்று வழிபட்டார். பின்னர் குவாலியர் டாடியா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது ராகுல் பேசியதாவது: 2014ம் ஆண்டு தேர்தலுக்கு முன் நாட்டின் காவலாளியாக இருக்க விரும்புகிறேன் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் அவரது அரசில் விவசாயிகளுக்கு பதில் 15 முதல் 20 தொழிலதிபர்கள்தான் பயனடைந்தனர்.  மெகுல் சோக்‌சி, நீரவ் மோடி, அனில் அம்பானியை எல்லாம் மெகுல் பாய்(சகோதரன்), நீரவ் பாய், அனில் பாய் என பிரதமர் மோடி அழைக்கிறார்.

ஆனால் அவர் ஏழை விவசாயியை சகோதரன் என கூறி கட்டி தழுவுவதில்லை. அவர் நெஞ்சில் இவர்களுக்கு இடமில்லை. சூட்-பூட் அணியவில்லை என்றால் நீங்கள் பிரதமரின் சகோதரர் ஆக முடியாது என்பது இதன் மூலம் தெரியவரும்.  நகை வியாபாரி நீரவ் மோடி 35 ஆயிரம் கோடியுடன் நாட்டை விட்டு தப்பிவிட்டார். இது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பட்ஜெட்டுக்கு சமமான நிதி. பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என பா.ஜ.வினர் கோஷமிடுகின்றனர். ஆனால் உ.பி.யில் பலாத்காரம் செய்த எம்.எல்.ஏவை, முதல்வர் யோகியும், பிரதமர் மோடியும் காப்பாற்ற முயல்கின்றனர். பா.ஜ எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பொதுத் துறை வங்கிகளுக்கு அனில் அம்பானி 45 ஆயிரம் கோடி கடன் செலுத்த வேண்டும்.

அவருக்கு, ரபேல் ஒப்பந்தம் கிடைப்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை எச்.ஏ.எல் நிறுவனத்துக்கு அளிக்காமல், அம்பானி நிறுவனத்துக்கு அளித்தது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளிக்க பிரதமருக்கு தைரியம் இல்லை. நாடாளுமன்ற விவாதத்தில் பிரதமரால் என் கண்ணை பார்க்க முடியவில்லை. செங்கோட்டையில் ஆற்றிய சுதந்திர தின உரையில், ‘‘நான் பிரதமராக பொறுப்பு ஏற்பதற்கு முன்பு, இந்த நாடு தூங்கி கொண்டிருந்தது’’ என மோடி கூறினார். இது காங்கிரஸ் தலைவர்களை அவமானப்படுத்துவது அல்ல. இந்த நாட்டு மக்களை அவமானப்படுத்தியுள்ளார். நாட்டை உருவாக்க பாடுபட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், சிறு வியாபாரிகள் அனைவருக்கும் இது அவமானம். உங்கள் தாய், தந்தையருக்கு ஏற்பட்ட அவமானம். இவ்வாறு ராகுல் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: