தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

புதுடெல்லி: ‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து மீண்டும் தமிழக அரசே தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு  மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் 100வது நாளான மே 22ம் தேதி பொதுமக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு பேரணியாக சென்றனர். அப்போது போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை எதிர்த்து 15க்கும் மேற்பட்ட பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது அமர்வு, துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த ஆகஸ்ட்  14ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று மேல்முறையீடு செய்துள்ளது.

 உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா நேற்று தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், ‘துப்பாக்கிச்சூடு பற்றி விசாரிக்க, தமிழக அரசு தரப்பில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இது, சரியான முறையில்தான் விசாரணை நடத்தியது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் மாற்றியது அவசியம் இல்லாத ஒன்று. இந்த உத்தரவை ரத்து செய்து, இச்சம்பவம் பற்றி மீண்டும் தமிழக அரசே  விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: