புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலிலும் போலீஸ், தொல்லியல் துறை இரவில் ஆய்வு

தஞ்சை: தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் எல்லாம் சிலைகள் திருடப்பட்டு, போலியான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பழனி ஸ்ரீரங்கம், தஞ்சை பெரியகோயில், தஞ்சை மாவட்டம் குடந்தை அருகே உள்ள பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில், சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோயில் என பெரும்பாலான கோயில்களில் ஆய்வுகள் நடத்தினர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் பசுபதீஸ்வரர்கோயிலில் நேற்று முன்தினம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி. ராஜாராம் தலைமையில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

போலீஸ் தரப்பில் 20 பேரும், தொல்லியல் துறை மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் 20 பேரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

பின்னர் அங்கிருந்து இந்த குழுவினர் தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்து சிலைகளை ஆய்வு செய்தனர். அப்போது சில சிலைகளில் தமிழ் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த தமிழ் எழுத்துக்கள் 200 ஆண்டு, 300 ஆண்டு தொன்மை வாய்ந்த எழுத்துக்களை போல அல்லாமல் தற்போதைய எழுத்துக்கள் போல இருந்ததால் அந்த சிலைகளின் தொன்மை குறித்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சிலைகளின் பழைய ஆவணங்களில் உள்ளபடி உயரம், எடைகள் ஆகியவற்றை இந்திய தொல்லியல் துறை தெற்கு மண்டல இயக்குனர் நம்பிராஜன் உள்ளிட்ட தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

பின்னர் கோயில் அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த ஆய்வு 5 மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது. அதன்பிறகு புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலிலும் நேற்று இரவு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையின் ஆய்வு மேற்கொண்டனர். பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கோயில்களில் இருந்து 382 சிலைகளும், தஞ்சை பெரிய கோயிலிலிருந்து 44 சிலைகளும், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலிலிருந்து 19 சிலைகளும் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கூடுதல் எஸ்.பி.ராஜாராமனிடம் நிருபர்கள் கேட்ட போது சிலைகளை மாற்றி வைத்தற்கான முகாந்தரம் இருப்பதால்தான் இந்த ஆய்வு நடைபெற்றது இந்த ஆய்வு பணி தொடர்ந்து நடைபெறும் இறுதியில் முடிவு தெரியும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: