மாயமாகி பின் பிடிபட்டதாக கூறப்பட்ட இன்டர்போல் தலைவர் மீது சீனா ஊழல் குற்றச்சாட்டு

பீஜிங்: மாயமாகி பின் கைது செய்யப்பட்ட சீனாவைச் சேர்ந்த இன்டர்போல் தலைவர் மெங்க் ஹாங்வெய் ஊழல் மற்றும் பிற கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக சீனா அறிவித்துள்ளது. சர்வதேச போலீஸ் எனப்படும் இன்டர்போல் அமைப்பின் தலைமையகம் பிரான்சின் லியோன் நகரில் அமைந்துள்ளது. வெளிநாடு தப்பிய குற்றவாளிகளை கண்டறிந்து, நாடு கடத்துவதில் இன்டர்போல் உதவுகிறது. உலகின் 192 நாடுகளின் ஒத்துழைப்புடன் செயல்படும் இந்த அமைப்பின் தலைவராக சீனாவை சேர்ந்த மெங்க் ஹாங்வெய் கடந்த 2016ல் பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 2020ம் ஆண்டு வரை உள்ளது. இதற்கிடையே, கடந்த மாத இறுதியில் பிரான்சில் இருந்து சொந்த நாட்டுக்கு செல்வதாக புறப்பட்ட மெங்க் மாயமானார். அவரை இன்டர்போல் அமைப்பு தேடி வந்த நிலையில், மெங்க் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும், உடனடியாக அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் நேற்று முன்தினம் இன்டர்போல் தலைமையகம் அறிவித்தது.

அதைத்தொடர்ந்து, மெங்க்கை தாங்கள்தான் பிடித்து வைத்து விசாரிப்பதாக சீனாவின் ஊழல் தடுப்பு பிரிவு அறிவித்தது. எதற்காக அவர் பிடித்து வைக்கப்பட்டார் என்ற தகவல் வெளியிடப்படாத நிலையில், மெங்க் ஊழல் மற்றும் பிற கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக சீன அரசின் பொது பாதுகாப்பு துறை இணையதளத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  இதில் ஊழல் தொடர்பான வேறெந்த விளக்கங்களும் கூறப்படவில்லை.

64 வயதாகும் மெங்க், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். பொது பாதுகாப்பு துறையின் துணை அமைச்சரான அவர், இன்டர்போல் தலைவர் பதவி ஏற்ற, முதல் சீனர். அவரது இந்த திடீர் கைது நடவடிக்கை, அரசியல் அத்துமீறலாகவே கருதப்படுகிறது. மெங்க் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, பொது பாதுகாப்பு துறை அமைச்சர் ஜாவ் லெஸி நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மெங்க் அரசியல் ரீதியாகவும் சில சட்டவிரோத செயல்களை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பாதுகாப்பு தலைவரும் நிலைக்குழு கமிட்டியின் முன்னாள் பொலிட்பீரோ உறுப்பினருமான ஜோவ் யாங்காங் ஊழல் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுபோல, மெங்க் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சீனாவில் அரசுக்கு எதிராக செயல்படும் உயர் பதவியில் இருப்பவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி கடுமையான தண்டனைக்கு ஆளாகும் சம்பவங்கள் பல நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: