தலைமை நீதிபதி தவிர மற்ற நீதிபதிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அதிகாரமில்லை: எச்.ராஜா தரப்பு ஐகோர்ட்டில் முறையீடு

சென்னை: நீதிமன்றத்தை அவமதித்து பேசிய விவகாரத்தில் தலைமை நீதிபதி அனுமதி பெறாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர மற்ற நீதிபதிகளுக்கு அதிகாரம் இல்லை என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் எச்.ராஜா தரப்பு வக்கீல் முறையிட்டார்.  புதுக்கோட்டை மாவட்டம் கே.பள்ளிவாசல் மெய்யபுரம் கிராமத்தில் கடந்த 15ம் தேதி நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டார். அப்போது, அனுமதி இல்லாத பகுதி வழியாக ஊர்வலம் செல்லக்கூடாது என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசாரிடம் எச்.ராஜா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் உயர் நீதிமன்றத்தை மிக கேவலமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்.

போலீசாருக்கு அவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் மற்றும் நீதிமன்றத்தை எச்.ராஜா திட்டியது ஆகியவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பல தொலைக்காட்சிகளும் இந்த வீடியோவை ஒளிபரப்பின.

 இதையடுத்து எச்.ராஜா மீது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து, அக்டோபர் 22ம் தேதிக்குள் எச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.   இந்நிலையில், எச்.ராஜா சார்பில் மூத்த வக்கீல் கே.எஸ்.தினகரன் தலைமை நீதிபதி தாஹில் ரமானி, நீதிபதி துரைசாமி ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில்  நேற்று காலை ஆஜராகி, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உள்ளது. வேறு நீதிபதிகள் ஆதாரங்களை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தலைமை நீதிபதி அனுமதிக்கு பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும். மற்ற டிவிஷன் பெஞ்ச் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய முடியாது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், நீங்கள் கூறும் தீர்ப்புகளின் நகலை தாக்கல் செய்தால் பரிசீலிக்கப்படும் என்று கூறினர்.

கிண்டி மாளிகையில் கவர்னருடன் திடீர் சந்திப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில்  விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா,  நீதிமன்றத்தையும், காவல்துறையையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவரை தனிப்படை அமைத்து தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் கைது செய்யப்படவில்லை. சர்வ சாதாரணமாக தமிழகத்தின் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அவரை போலீசார் கைது செய்யாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று எச்.ராஜா ‘’திடீரென’’ சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. எச்.ராஜாவை தனிப்படை போலீஸ் தேடி வரும் நிலையில் கவர்னருடனான சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: