முட்டி மோதும் மூத்த தலைவர்கள் தமிழக காங். செயல் தலைவர்களை நியமிக்க மேலிடம் திடீர் முடிவு: தலைவர் பதவி யாருக்கு? டெல்லியில் ஆலோசனை

சென்னை: தமிழக காங்கிரசில் செயல் தலைவர்களை நியமிக்க டெல்லி மேலிடம் திடீர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மூத்த தலைவர்கள் முட்டி மோதி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தமிழக காங்கிரசில் பல்வேறு மாற்றங்களை செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்று மூத்த தலைவர்கள் சிலர் டெல்லியில் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். ஆனால், அவரை தேர்தல் நேரத்தில் மாற்றினால் கட்சியில் குழப்பம் ஏற்படும் என்பதால் செயல் தலைவர்களை நியமிக்கலாம் என்று மூத்த தலைவர்கள் பலர் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.  இந்நிலையில், தமிழக காங்கிரசில் ஒட்டு மொத்த மாற்றத்தை கொண்டு வர மேலிட தலைவர்கள் முடிவெடுத்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு கட்சி மேலிடம் நேற்று திடீர் அழைப்பு விடுத்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு அவசரமாக அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். அவர், நேற்று டெல்லியில் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், மூத்த தலைவர்கள் அகமது படேல், அசோக் கெலாட் ஆகியோரை சந்தித்தார். அப்போது திருநாவுக்கரசருடன் அவர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். தமிழக காங்கிரசில் நிலவும் உச்சகட்ட குழப்பத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் திருநாவுக்கரசருடன் விவாதித்ததாகவும், அப்போது, செயல் தலைவர்களை நியமிப்பது குறித்து கருத்து கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் யார் யாரையெல்லாம் செயல் தலைவர் பதவிக்கு நியமிக்கலாம் என்று அவருடன் ஆலோசனை நடத்தியதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருநாவுக்கரசரை தலைவர் பதவியில் இருந்து மாற்றாமல் 4 செயல் தலைவர்களை நியமிக்கலாமா? என்பது குறித்தும் விவாதித்தாக தெரிகிறது. அல்லது ப.சிதம்பரத்தை தலைவராக நியமித்துவிட்டு, 4 செயல் தலைவர்களை நியமிக்கலாமா? என்ற ஒரு கருத்தையும் மேலிட தலைவர்கள் முன்வைத்ததாக தெரிகிறது.  செயல் தலைவர்களாக திருநாவுக்கரசர், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை நியமிக்கலாம் என்றும், தேர்தல் பிரசார குழு தலைவராக ஈவிகேஎஸ்.இளங்கோவனை நியமிக்கலாம் என்றும் மேலிட தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தியுள்ளதாக காங்கிரசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 இந்த தகவலை தொடர்ந்து செயல் தலைவர் பதவி கேட்டு, தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் மேலிட தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் இன்னும் ஓரிரு நாளில் தமிழக காங்கிரசில் பெரிய அளவில் மாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று திருநாவுக்கரசருடன் நடத்திய ஆலோசனை குறித்து மேலிட தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் தெரிவிக்க உள்ளனர். அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது  தமிழக காங்கிரசார் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: