தேதி அறிவிப்புக்கு முன்பே அரசு நிதி வாரியிறைப்பு: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடக்குமா?

* மக்கள் காட்டில் தங்கம், பணம், பரிசு மழை

* தென்மாவட்ட அமைச்சர்கள் படையெடுப்பு

* இங்குள்ள கிராமங்களில் 2 ஆண்டுகளாக  அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.

* திருப்பரங்குன்றம் தொகுதியில் 38 ஊராட்சிகள் உள்ளன.

* இப்போது 15 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் அவசரம் அவசரமாக நடந்து வருகின்றன.

மதுரை: தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே திருப்பரங்குன்றம் தொகுதியிலுள்ள 38 ஊராட்சிகளுக்கு அரசு நிதி 15 கோடி வாரி இறைக்கப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில், தங்கம், பணம் மற்றும் பரிசு பொருட்கள் மழையாக பொழிகிறது. தென்மாவட்ட அமைச்சர்கள் முழுவீச்சில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி ஒரு இடைத்தேர்தல் தொகுதியாகவே மாறி விட்டது. 2016 பொதுத்தேர்தலுக்கு பிறகு அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சீனிவேல் இறந்ததால், 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்ற போஸ் இறந்ததைதொடர்ந்து, மீண்டும் 2 ஆண்டு இடைவெளியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டி உள்ளது. இந்த தேர்தல் நவம்பர், டிசம்பரில் ம.பி, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுடன் நடக்குமா அல்லது 2019 ஏப்ரல், மே மாதங்களில் வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன் சேர்த்து நடக்குமா என்பதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. தேர்தல் ஆணையத்தின் முடிவு என்ன என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.

இடைத்தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே அனைத்து அரசியல் கட்சிகளும் களமிறங்கி ஆரம்பக்கட்ட பணிகளை செய்து வருகின்றன. குறிப்பாக, அதிமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் நலத்திட்ட உதவிகள் எனக்கூறி, அரசு பணத்தை வாரி இறைக்கிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 420 ஊராட்சிகளில், 38 ஊராட்சிகள் திருப்பரங்குன்றம் தொகுதியில்  உள்ளன. இந்த 38 ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் 2 ஆண்டுகளாக கண்டுகொள்ளாத குடிநீர், சாலை சீரமைப்பு, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளுக்காக 15 கோடி சமீபத்தில் ஒதுக்கப்பட்டு பணிகள் அவசரம் அவசரமாக நடந்து வருகின்றன. அரசு நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் பொருட்கள் தாராளமாக அதிகாரிகள் மூலம் அள்ளி வழங்கப்பட்டுள்ளன. அரசின் திருமண உதவி திட்டமான தாலிக்கு தங்கம் மற்றும் பணம் மின்னல் வேகத்தில் வழங்கப்படுகின்றன. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் தாலிக்கு தங்கம் கோரி விண்ணப்பித்துள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. பல்லாயிரம் பெண்கள் கர்ப்பிணிகளாகியும், குழந்தை பிறந்தும் தங்கம், பணம் கிடைக்காமல் காத்திருக்கிறார்கள். இதுதவிர அரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி பணம், பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இந்த விழாக்களில் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் பங்கேற்று உதவிகள் வழங்கி வருகின்றனர். இதுதவிர கட்சி சார்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்கள் தாராளமாக வழங்கப்படுகின்றன. தென்மாவட்டத்தை சார்ந்த அமைச்சர்கள் உள்பட 10 அமைச்சர்கள் தொகுதியை அடுத்தடுத்து முற்றுகையிடுகின்றனர். மாவட்ட நிர்வாகமே இந்த தொகுதியை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினர் கூறும்போது, ‘‘இடைத்தேர்தல் தேதியை ஆணையம் அறிவிக்கும் முன்பே ஆளுங்கட்சியினர் அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வது தொகுதி முழுக்க அப்பட்டமாக தெரிகிறது.  

ஆளுங்கட்சிக்கு ஓட்டுகளை எதிர்பார்த்து, மதுரை மாவட்டத்தில் இந்த தொகுதியில்  மட்டும் அரசு நலத்திட்டம் என்ற பெயரில் தங்கம், பணம், பரிசுத்தொகை வாரி  இறைக்கப்படுகிறது. இதற்காக அமைச்சர்கள் ஊர் ஊராக விழா நடத்தி வழங்குகின்றனர். இதற்கு அதிகாரிகளும் துணை போகின்றனர். காலியாக தொகுதி அறிவிக்கப்பட்ட பிறகு, நலத்திட்ட உதவிகள், சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுவது தவறான ஒன்று. அடுத்து இடைத்தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்டால், எப்படியெல்லாம் அத்துமீறுவார்கள் என்பதற்கு இதுவே  ஆதாரம். இதனை முந்தைய இடைத்தேர்தலில் ஆணையம் நன்றாக அறிந்துள்ளது. எனவே, இதில்  தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதே கேள்வி. அரசு அத்துமீறலால் இடைத்தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது,’’ என்றனர்.

1,662 வாக்காளர்கள் நீக்கம்

தொகுதி வாக்காளர் பட்டியலில் 2016 பொதுத்தேர்தலின்போது வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்து 79,096 ஆக இருந்தது. அதன் பிறகு 6 மாதத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 லட்சத்து 85,980 ஆக அதிகரித்தது. 2 ஆண்டு இடைவெளியில் தற்போது 2 லட்சத்து 84,318 ஆக குறைந்துள்ளது. அதாவது 18 வயதான புது வாக்காளர் சேர்க்கப்பட்டும் வாக்கு எண்ணிக்கை குறைந்துள்ளது. 1,662 வாக்காளர் நீக்கப்பட்டது எப்படி என்பது சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: