8 வழிச்சாலைக்கு ஆட்சேபனை தெரிவிக்க அழைப்பு கடிதம் இல்லாதவர்களையும் அனுமதிக்க போலீசுடன் வாக்குவாதம்: கலசபாக்கத்தில் பரபரப்பு

கலசபாக்கம்: சென்னை- சேலம் 8 வழிச்சாலைக்கு ஆட்சேபனை தெரிவிக்க அழைப்பு கடிதம் வராதவர்களையும் அனுமதிக்க கோரி போலீசாருடன்  விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை- சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு  விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   இந்த நிலையில் அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்த 101 விவசாயிகளுக்கான கருத்து கேட்பு கூட்டம் கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் தேசிய நெடுஞ்சாலை நில  எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேல், தாசில்தார்கள் ரவி, லலிதா தலைமையில் நேற்று 5வது நாளாக நடந்தது.

இதையொட்டி காலை முதல் எஸ்பி  சிபிசக்கரவர்த்தி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்டத்துக்கு வந்த விவசாயிகளை கடும் சோதனைக்கு பிறகே  அனுமதித்தனர். மேலும், அழைப்பு கடிதம் வராத விவசாயிகளையும் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என போலீசாரிடம் விவசாயிகள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுடன்  போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்ட  விவசாயிகள் ஆட்சேபனை மனுக்கள் அளித்தால் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு கருத்து கேட்கப்படும் என்றனர். இதையடுத்து விவசாயிகள்  அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: