தமிழ்நாட்டிலேயே பாலாற்றில்தான் அதிகளவு மணல் கொள்ளை நடந்துள்ளது: பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: தமிழ் நாட்டிலேயே பாலாற்றில்தான் அதிகளவு மணல் கொள்ளை நடந்துள்ளது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறினார். பாலாற்றை பாதுகாக்க வலியுறுத்தி பாமக சார்பில் இளைஞரணித் தலைவர் அன்புமணி தலைமையில் பாலாற்றைக் காப்போம், கரம் கோர்ப்போம் என்ற  2 நாள் பிரசார இயக்கம் நடைபெற்றது. முதல்நாளான செப்.22ம் தேதி  வேலூர் மாவட்டத்திலும், நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பிரசார இயக்கம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் பாலாற்றைப் பார்வையிட்டு செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது: கர்நாடக  மாநிலம் நந்திதுர்க்கத்தில் உருவாகும் பாலாறு கர்நாடகாவில் 93 கி.மீ, ஆந்திராவில் 23 கி.மீ, தமிழகத்தில் 222 கி.மீ தூரம் பாய்கிறது. இதில் கர்நாடகாவில் 17 தடுப்பணைகளும், ஆந்திராவில் 33 தடுப்பணைகளும் கட்டியுள்ளனர்.  ஆனால் 222 கி.மீ.தூரம் பாயும் தமிழகத்தில் பாலாற்றில் ஒரு தடுப்பணை கூட இல்லை. தற்போது பாலாற்றில் 5 தடுப்பணைகள் கட்டப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் நிதி ஒதுக்கப்படவில்லை.

தடுப்பணைகள்  கட்டாததால் மழைக்காலங்களில் தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. மேலும் பாலாற்றில் தான் அதிக அளவில் மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.   மேலும் வேலூர் மாவட்டத்தில் 170 ரசாயனக் கழிவுகள் பாலாற்றில் விடப்படுகின்றன. அந்த ரசாயனக் கழிவுகள் கலந்த நீரையே பொதுமக்கள் குடிக்கவேண்டிய நிலை உள்ளது. ஏரிகளின் மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3  ஆயிரம் ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. இந்த ஏரிகளை தூர்வாரி முறையாகப் பராமரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 4 ஆண்டுகளில் நிலுவையில் உள்ள 20 நீர்மின் திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர 1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக நடிகர் கருணாசை அரசு அவசர அவசரமாக கைது செய்துள்ளது. ஆனால் நீதிமன்றத்தையும், அறநிலையத்துறை அதிகாரிகளையும் அவதூறாகப் பேசிய எச்.ராஜாவை இதுவரை கைது  செய்யவில்லை. காரணம் அவர் இபிஎஸ், ஓபிஎஸ் முதலாளிக் கட்சியில் இருக்கிறார். அதிமுக மந்திரிகள் 27 துறைகளில் செய்துள்ள ஊழல்கள் குறித்து 206 பக்கம் புகார் கவர்னரிடம் கொடுத்தோம். இதுவரை நடவடிக்கை  இல்லை. கவர்னர் நேர்மையானவர் என்று நம்புகிறோம். காலதாமதப்படுத்துவது கொள்ளைக்கு அவரும் உடந்தையோ என்று எண்ணத் தோன்றுகிறது. நாங்கள் கொடுத்த ஊழல் புகார்மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது  வெளிச்சத்துக்கு வந்திருக்கும் ஊழல்களை தடுத்திருக்க முடியும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: