எச்.ராஜா, எஸ்.வி.சேகரை சலுகை தந்து காக்கும் நிலையில் கருணாஸை மட்டும் கைது செய்வதா?: தமிழக அரசுக்கு தலைவர்கள் கண்டனம்

சென்னை: சட்டம் கடமையை செய்யும் போது எச். ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்களை சட்டம் சலுகை தந்து பாதுகாப்பது ஏன் என்றும் எம்.எல்.ஏ கருணாஸ் கைது செய்ததற்கும் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்): கருணாஸ் மீது சட்டம் கடமையை செய்யும் போது எச். ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்களை சட்டம் சலுகை தந்து பாதுகாப்பது ஏன்? சட்டம் அனைவருக்கும் பொது தானே. கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையையும், முதல்வரையும் அவதூறாக பேசியதற்காக நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான  கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பேசியது விமர்சனத்துக்குரியது. அதேசமயம் எச்.ராஜா சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியால் புகார் செய்யப்பட்டு, அவர் மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில்,  காவல்துறைக்கும், நீதிமன்றத்திற்கும் சவால் விடுக்கும்முறையில் காவல்துறை பாதுகாப்புடன் பொதுநிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார்.

 விஜயகாந்த் ( தேமுதிக தலைவர்): நடிகரும், தற்போதைய திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கைது செய்தது  கண்டிக்கதக்கது. எத்தனையோ பேர், எத்தனையோ கருத்துக்களை பேசிவருவதும், காவல்  துறையை தாக்குவதும், நீதிமன்றத்தை அவமதித்து பேசுவதும் என்று தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் கருணாசை மட்டும் கைது செய்து, அக்டோபர் 5ம் தேதி வரைக்கும் காவலில் வைப்பது என்பது தவறான செயலாகும். அப்படி இவர் பேசியது தவறு என்று தமிழக அரசு முடிவெடுத்தால், சமீப காலமாக எத்தனையோ பேர்  அவரவர் கருத்துக்களை தொடந்து பதியவைத்துள்ளார்கள் அவர்கள் மீது இந்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. ஒரு சிலரை பழிவாங்கும் போக்கில் நடவடிக்கை எடுப்பதும், ஒரு சிலரை கண்டுகொள்ளாமல் இருப்பதும்  ஏற்றுக்கொள்ளமுடியாது.தராசு மாதிரி சரிசமமாக தவறாக பேசுபவர்கள் யாராக இருந்ததாலும் நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): கருணாஸ் பேசியது ஏற்புடையதல்ல. அதே சமயம் அவர் வருத்தமும் தெரிவித்துவிட்டார். இதேபோல் தொடர்ந்து பேச்சுரிமையை தவறாகப் பயன்படுத்தி சட்டத்திற்கும், நீதிமன்றத்திற்கும் சவால்  விடும் வகையில் பேசுவோருக்கும் சட்டம் சமம் என்பது அனைவரின் கருத்து. தமிழக அரசின் இன்றைய கைது நடவடிக்கையால் அதிகார பலம், ஆட்சி பலம் இருப்பவர்களுக்கு சட்டம் தனியோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. டிடிவி. தினகரன் (அமமுக துணை பொதுச்செயலாளர்):  கருணாஸ் தவறை ஒப்புக்கொண்டார். ஆனால் எச்.ராஜா அது என் குரலே இல்லை என மழுப்பினார். கருணாசுக்கு ஒரு நீதி, எச்.ராஜாவுக்கு ஒரு நீதி என்பது இந்த அரசின்  இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. இந்த அரசு அடிமை அரசு என்பதற்கு இது சரியான எடுத்துக்காட்டு. முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): எச். ராஜா அறநிலையத்துறை அதிகாரிகளை கேவலமாக பேசுகிறார். அவர் மீது எட்டு வழக்குகள் பதிந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் கைது இல்லை. இவர்களுக்கு எதிராக  யார் பேசினாலும் உடனே வழக்கு பதிவதும் கைது செய்வதும் நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: