ஆட்சி போய் விட்டால் நாய் கூட நம்மள மதிக்காது : அமைச்சர் பாஸ்கரன் பரபரப்பு பேச்சு

சிவகங்கை,: ‘ஆட்சி போய் விட்டால் நாய் கூட நம்மள மதிக்காது’ என சிவகங்கையில் நடந்த அதிமுக கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.சிவகங்கையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நேற்று முன்தினம்  மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. தலைமை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது: சென்னையில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கட்சியினர் கலந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. பூத் கமிட்டி அமைப்பது மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல் ஆகியவற்றை சரிபார்த்தல், வரும் 25ம் தேதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் ஆகிய பணிகளில் கட்சியினர் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். கட்சியில் தொண்டர்கள் ஆர்வம் இல்லாமல் சோர்வுடன் இருக்கின்றனர். யார் வேண்டுமானாலும் கூட்டம் போடலாம். முயல், ஆமை கதை போல ஆகி விடக்கூடாது. மைக்கில் பொதுப்படையாக சொல்ல முடியாது. அதிகாரிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிட்டு, ஆட்சி போய் விட்டால் நாய் கூட நம்மளை மதிக்காது.

கட்சியில் உள்ள தொய்வு தற்போதுதான் சரி செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் பேச்சை இப்போதுதான் அமைச்சர்கள் கேட்டு வருகின்றனர். கட்சி பதவிகளை நிரந்தரமாக கேட்கவில்லை. கட்சி வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் பதவிகளில் இருக்கிறோம். பதவியிலேயே நிரந்தரமாக இருக்க வேண்டும் என நினைக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார். ஏற்கனவே டாக்டர்கள் பேச்சை, கர்ப்பிணிகள் கேட்டால் ஆபரேஷன்தான் என பேசி, பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சர் பாஸ்கரன், தற்போது அதிமுக உள்கட்சி பிரச்னை, தொண்டர்களின் சோர்வு என பேசி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: