கோயில்களில் எந்த விதிப்படி யானை வளர்க்கப்படுகிறது? : அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கோயில்களில் எந்த விதிப்படி வளர்க்கப்படுகிறது என்பது குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை, நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த ஆண்டனி கிளமென்ட் ரூபின், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:கடந்த 2016ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, மசினி யானையை திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தானமாக வழங்கினார். சில மாதங்களுக்குப் பின் பரிசோதித்த போது மசினி மன அழுத்தத்துடன் இருந்தது தெரியவந்தது. அப்போது யானைப் பாகனை கடுமையாக தாக்கியது. தொடர்ந்து சிறு, சிறு சம்பவங்கள் நடந்தது.இந்நிலையில், கடந்த மே 25 அன்று கோயில் வளாகத்தினுள் நின்றபோது யானைப்பாகனை தாக்கி கொன்றது. உடனடியாக மகளிகுடியிலுள்ள உச்சினி காளியம்மன் கோயிலுக்கு மசினியை மாற்றியுள்ளனர். யானை இயல்பான நிலையில் இல்லை. மசினியை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டும். அனைத்து யானைகளையும் வணிக நோக்கத்தில் பயன்படுத்தாமல், சுதந்திரமாக வாழவும், தேவையான சிகிச்சைகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அரசுத்தரப்பில், ‘வேப்பேரி கால்நடை ஆராய்ச்சி மைய மருத்துவர்கள் ஆலோசனைப்படி, ஒரத்தநாடு கால்நடை ஆராய்ச்சி மையத்தின் மூலம் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. யானை முறையாக பராமரிக்கப்படுகிறது’ என கூறப்பட்டது.இதையடுத்து, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கோயில்களில் எந்த விதிகளின் அடிப்படையில் வளர்க்கப்படுகிறது. இதற்கென உள்ள விதிகள் உள்ளிட்டவை குறித்து அரசுத்தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: