அதிகாரிகள் கண்காணிப்பால் 12 மணி நேரம் காமெடி விமானத்தில் கடத்தி வந்த 2.5 கோடி தங்கத்தை எடுக்க முடியாமல் விழி பிதுங்கிய கடத்தல்காரன்: துபாய் - சென்னை - டெல்லி - கோவை இடையே ‘நான்ஸ்டாப் பயணம்’

சென்னை:  துபாயில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட தங்கத்தை சர்வதேச கடத்தல் கும்பல் கீழே இறக்க முடியாமல் தவித்தனர். அதனால் கோவை, டெல்லி, சென்னை என 12 மணிநேரம் விமானத்திலேயே தங்க  கட்டிகள் பறந்தன. கோவையில் இருந்து ஏர் இண்டியா விமானம் நேற்று முன்தினம் மாலை 4.15 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வந்தது. இந்த விமானம், மீண்டும் மாலை 5 மணிக்கு டெல்லிக்கு புறப்பட தயாரானது. இதில்,  வெளிநாட்டில் இருந்து மிக பெரிய அளவில் தங்கக்கட்டிகள் கடத்தி வரப்பட்டு விமானத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சிறப்பு அனுமதி பெற்று விமானத்துக்குள் ஏறி இருக்கைகள் மற்றும் கழிவறையில் சோதனை நடத்தினர். அப்போது, கழிவறையில் உள்ள தண்ணீர் தொட்டியையும் திறந்து பார்த்து சோதித்தனர், அதனுள்  பாலிதீன் கவர் சுற்றப்பட்டிருந்த கறுப்பு நிற பார்சல் கிடந்தது. அதை எடுத்து பிரித்துப் பார்த்தனர். அதற்குள் ஏராளமான தங்ககட்டிகள் இருந்தன. அதன் மொத்த எடை 8.2 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு ரூ.2.5 கோடி.

இதையடுத்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்து, பயணிகளிடமும் விசாரித்தனர். இதில் சந்தேகத்துக்கு இடமான சென்னையை சேர்ந்த தாஜுதீன் (38) என்ற  பயணியை மட்டும் கீழே இறக்கி விசாரித்தனர். இந்த சோதனை  காரணமாக 5 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய ஏர் இண்டியா விமானம், 35 நிமிடம் தாமதமாக மாலை 5.35 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றது. அதன்பின்பு விமானத்தில் இருந்து பிடிபட்ட தாஜுதீனை  அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது பல ருசிகரமான சம்பவங்கள் தெரிய வந்தன. அந்த தங்க கட்டிகள் துபாயில் இருந்து ஏர் இண்டியா விமானத்தில் தாஜுதீன் என்பவர் கடத்தி வந்துள்ளார். இந்த விமானம் நேற்று முன்தினம் அதிகாலை 4.40 மணிக்கு  சென்னை சர்வதேச விமான நிலையம்  வந்துள்ளது. தாஜுதீன் தங்ககட்டிகளுடன் இறங்க தயாரானபோது, சென்னை விமான நிலையத்தில் கடுமையான சுங்க சோதனை நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, தாஜுதீன்  விமானத்தில் உள்ள கழிவறைக்கு சென்று தங்க கட்டிகளை விமானத்தில் மறைத்து வைத்து விட்டு கீழே சென்றுவிட்டார்.  அந்த விமானம் நேற்று முன்தினம் காலை 6.20 மணிக்கு சென்னையில் இருந்து உள்நாட்டு விமானமாக  டெல்லி சென்றது.

அதன்பின்பு டெல்லியில் இருந்து பகல் 12.40 மணிக்கு அந்த விமானம் சென்னை திரும்பியது. அப்போது தாஜுதீன், அதை எப்படியாவது விமானத்துக்குள் சென்று எடுத்துவிட நினைத்து அதே விமானத்தில் கோவைக்கு செல்வதற்கு  டிக்கெட் எடுத்து உள்ளே சென்றுள்ளார். அந்த விமானம் பிற்பகல் 1.30 மணிக்கு கோவை செல்லும். எனவே தாஜுதீன் கோவை செல்ல டிக்கெட் எடுத்து விமானத்தில் ஏறி உள்ளார். ஆனால், கோவையிலும்  மத்திய வருவாய் துறை அதிகாரிகள் விமானத்தை கண்காணிப்பதாக தகவல் கிடைத்ததால் அவர் கோவையிலும் தங்க  கட்டிகளை எடுக்காமல் விமானத்தில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் மீண்டும் அவசர அவசரமாக சென்னை வழியாக டெல்லி செல்ல முடிவு செய்து டெல்லிக்கு டிக்கெட் எடுத்து விமானத்தில் ஏறி உள்ளார்.

சென்னையில் விமானம் மாலை 4.25 மணிக்கு தரையிறங்கியது. டெல்லி சென்று இறங்கி தங்க கட்டிகளை எடுத்துக் கொள்ளலாம் என்று தாஜுதீன் விமானத்திலேயே அமர்ந்திருந்தார். ஆனால், அதற்குள் மத்திய வருவாய்  புலனாய்வு  துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அவர்கள் நேற்று முன்தினம் காலையில் இருந்தே சென்னை விமான நிலையத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவர்கள், நேற்று முன்தினம் மாலை தங்க  கட்டிகளை பறிமுதல் செய்தனர்.  இதையடுத்து துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் சென்னையில் இருந்து டெல்லி, டெல்லியில் இருந்து சென்னை, பின்னர் சென்னையில் இருந்து  கோவைக்கும் அதன்பின் கோவையில்  இருந்து சென்னைக்கும் என தொடர்ந்து 12 மணிநேரம் விமானத்திலேயே பறந்துள்ளது. அதேபோல் அந்த விமானத்தில் இருந்து தங்கத்தை தாஜுதீன் வெளியில் கடத்தி வர முடியாமல் மிகவும் தவித்துள்ளார். பிறகு தாஜுதீனை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்து தீவிரமாக விசாரித்தனர். அவரது பின்னணியில் இருக்கும் கடத்தல் கும்பல் யார்? விமானம் செல்லும் வழித்தடங்கள் குறித்து தகவல்  கொடுத்தவர்கள் யார்? விமான நிலையத்தில் கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் யார் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: