கம்பீருடன் கருத்து வேறுபாடா? .... டெல்லி கிரிக்கெட் கமிட்டி பதவி விலகினார் சேவக்

புதுடெல்லி: டெல்லி மாநில கிரிக்கெட் சங்க கமிட்டி உறுப்பினர்களான வீரேந்தர் சேவக், ஆகாஷ் சோப்ரா, ராகுல் சிங்வி மூவரும் ஒட்டுமொத்தமாக பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பாகி உள்ளது.டெல்லி மாநில கிரிக்கெட் சங்கத்தின் வளர்ச்சிக்கான ஆலோசனை வழங்குவதற்கு முன்னாள் அதிரடி வீரர் விரேந்தர் சேவக், ஆகாஷ் சோப்ரா, ராகுல் சிங்வி ஆகியோர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக கவுதம் கம்பீர் சமீபத்தில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், டெல்லி மாநில அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக, இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மனோஜ் பிரபாகரனின் பதவிக்காலத்தை நீட்டிக்க சேவக் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர்.

இதை ஏற்க சங்க நிர்வாகம் மறுத்து விட்டது. மேலும், மேட்ச் பிக்சிங் சூதாட்ட புகாருக்கு ஆளான மனோஜ் பிரபாகர் பயிற்சியாளராக இருக்க கம்பீர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தநிலையில், சேவக் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் மூவரும் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராஜினாமா குறித்து சேவக் கூறுகையில், ‘‘டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் நலன் கருதி நாங்கள் பதவியை ராஜினாமா செய்கிறோம். எங்களின் பிஸியான தினசரி பணிகளுக்கு மத்தியில், டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் பணிகளை தொடர முடியாத காரணத்தால் விலகுகிறோம்’’ என்றார். ஆனாலும், கம்பீருடனான மோதலே சேவக்கின் விலகலுக்கு காரணம் என ஒருதரப்பினரும், இரட்டை ஆதாய பதவிக்கு எதிரான உச்ச நீதிமன்ற உத்தரவால் இவர்கள் 3 பேரும் பதவி விலகியதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: