கோவையில் நேற்று ஒரே நாளில் 100 டன் மீன் 1.25 கோடிக்கு விற்பனை: வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி

கோவை; கோவை உக்கடத்திலுள்ள மொத்த மற்றும் சில்லரை மீன் மார்க்கெட்டில் நேற்று ஒரே நாளில் 100 டன் மீன் சுமார் ₹1.25 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. கோவை உக்கடம் லாரி பேட்டைக்கு பின்புறம் மொத்த மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 4 மணி முதல் 10 மணி வரையும், சனி, ஞாயிறு கிழமைகளில் காலை 3 மணி முதல் 11 மணி வரையும் மொத்தம் மற்றும்  சில்லரை விற்பனை நடக்கிறது. அதே போல் உக்கடம் செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் சில்லரை மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு கடல் மீன்கள் மற்றும் அணை மீன்கள் விற்பனைக்கு வருகிறது. இவை இரண்டிற்கும் சேர்த்து  தினசரி 2 ஆயிரம் பேரும், சனி, ஞாயிறுகளில் 9 ஆயிரம் பேரும் மீன் வாங்க வருகின்றனர். இரண்டு மார்க்கெட்டிலும் சாதாரண நாட்களில் தினசரி அதிகபட்சம் 25 டன் வரையும், சனி, ஞாயிறுகளில் 50 டன் வரையும் விற்பனையாகும்.

இந்நிலையில், நேற்று இரண்டு இடங்களிலும் 10 ஆயிரம் பேர் வரை மீன் வாங்க வந்துள்ளனர். இரண்டு மார்க்கெட்டிலும் சேர்த்து 100 டன் மீன் விற்பனையாகியுள்ளது. இது வழக்கத்தை விட அதிகமாகும்.இது குறித்து மொத்த மீன் மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் பாவா கூறியதாவது:இன்று புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை பெரும்பாலான இந்துக்கள் தவிர்த்து விரதமிருப்பது வழக்கம். புரட்டாசி மாதம் தொடங்குவதற்கு முதல் நாளான நேற்று ஆவணி மாதம் முடிவதால்,  விரதம் துவங்குவதற்கு முன்பாக அசைவ உணவை சாப்பிட்டு நிறைவு செய்யும் பொருட்டு, அதிகளவில் வாடிக்கையாளர்கள் மீன் வாங்கினர். இதனால் இரண்டு மார்க்கெட்டிலும் சேர்த்து ₹1.25 கோடிக்கு மீன்  விற்பனையாகியுள்ளது.

இரண்டு மீன் மார்க்கெட்டிற்கும் நேற்றைய விற்பனையை விட வரத்து 25 சதவீதம் அதிகரித்ததால், விலை சரிந்தது. நேற்றைய மீன் விலை விபரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் முந்தைய விலை): வஞ்சிரம் சிறியது (2 முதல்  இரண்டரை கிலோ எடையுள்ளது) கிலோ ₹250-300 (350-450), வஞ்சிரம் பெரியது (6 முதல் 7 கிலோ எடையுள்ளது) கிலோ ₹500 (500-1,000), பாறை, ஊளி, வாவல் ₹250(400), நண்டு ₹150-400 (200 -450), சங்கரா ₹80-100 (200), அயிலை ₹100(200), மத்தி ₹50 (100), ரோகு, கட்லா, மிருகால், கட்லா ஆகிய அணை மீன்கள் ₹120,(120-150). இன்று முதல் விற்பனை பாதியாக குறையும் என்பதால்,  விலை மேலும் சரியும் வாய்ப்புள்ளது. இவ்வாறு பாவா கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: