முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி இறுதி போட்டியில் இன்று ரயில்வே ஐஓசி மோதல்

சென்னை: எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் ரயில்வே - ஐஓசி அணிகள் இன்று மோதுகின்றன. எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதலாவது அரை இறுதியில் ரயில்வே விளையாட்டு வாரியம் - பஞ்சாப் & சிந்து வங்கி அணிகள் நேற்று மோதின. தொடக்கம் முதலே ஒருங்கிணைந்து விளையாடி தாக்குதல் நடத்திய ரயில்வே அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்து பஞ்சாப் & சிந்து வங்கி அணியை திணறடித்தனர். இடைவேளையின்போது ரயில்வே அணி 2-0 என முன்னிலை வகித்தது. 3வது மற்றும் 4வது கால் மணி நேர ஆட்டத்திலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அந்த அணி மேலும் 2 கோல் திணித்து அசத்தியது. ஆட்ட நேர முடிவில் ரயில்வே அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று பைனலுக்கு முன்னேறியது.

அந்த அணி சார்பில் நீலகண்ட ஷர்மா (8வது நிமிடம்), ஹர்சாகிப் சிங் (14’ மற்றும் 31’), ரஜின் கந்துல்னா (36வது நிமிடம்) கோல் போட்டனர். பஞ்சாப் அணி கடுமையாக முயற்சித்தும் ஒரு ஆறுதல் கோல் கூட அடிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தது. மற்றொரு அரை இறுதியில் இந்தியன் ஆர்மி - இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், இரு அணி வீரர்களும் ஈடுகொடுத்து விளையாடி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினர். ஆர்மி அணி 3-1 மற்றும் 4-2 என்ற கணக்கில் இரு முறை முன்னிலை பெற்றாலும், உறுதியுடன் போராடிய ஐஓசி அணி வீரர்கள் கடைசி கட்டத்தில் தொடர்ச்சியாக 3 கோல் போட்டனர். இழுபறியாக நீடித்த இப்போட்டியில் ஐஓசி அணி 5-4 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஐஓசி சார்பில் அர்மான் குரேஷி (5’ மற்றும் 42’), குர்ஜிந்தர் சிங் (54’, 61’), அர்பான் யூசுப் (63’) ஆகியோர் கோல் போட்டனர். ஆர்மி அணி சார்பில் சஜீப் டுங் டுங் (20’), பிராஜ் எக்கா (27’), சஞ்சய் டாப்போ (32’). குர்பிரீத் சிங் (53’) கோல் அடித்தனர்.  இன்று மாலை நடைபெறும் பைனலில் ரயில்வே -  ஐஓசி அணிகள் மோதுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: