தூத்துக்குடி: கோயில்பட்டி அருகே மீண்டும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மீண்டும் மின்கம்பி அறுந்து விழுந்ததில் தென் மாவட்டங்களில் இருந்து மும்பை, பெங்களூருவிற்கு செல்லும் ரயிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டியில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து, ரயில்களுக்கான மின்கம்பியில் விழுந்தது. இதனால் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு 7 மணி நேரம் ரயில் போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள், உடனடியாக மின்சாரத்தை துண்டித்து, அறுந்துவிழுந்த மின்கம்பியை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
