சென்னை: தமிழக அரசின் 68 பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அரசுக்கு ரூ.78,854 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்ைக துறையின் அறிக்கை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மின்வாரியம், போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் உள்ளிட்ட 68 பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 6 செயல்படாத நிறுவனங்கள் என மொத்தம் 74 நிறுவனங்கள் உள்ளன. இந்த பொதுத்துறை நிறுவனங்களில் 2.91 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
கடைசியாக இறுதி செய்யப்பட்ட கணக்குகளின்படி, இப்பொதுத்துறை நிறுவனங்களில் பதிவான மொத்த விற்பனை வரவு ரூ.1,10,850.43 கோடி ஆகும். இது மாநில உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பில் 8.54 சதவீதமாக அமைந்துள்ளது. இறுதி செய்யப்பட்ட கணக்குகளின்படி, இந்நிறுவனங்களின் திரண்ட இழப்பு ரூ.78,854.25 கோடி. கடந்த 2017 மார்ச் 31ல் 74 பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த முதலீடு ரூ.1,53,870.74 கோடி. இதில், மின்சக்தி துறையின் பங்கு 92.95 விழுக்காடாகவும், சேவைத்துறையின் பங்கு 3.20 விழுக்காடாகவும் அமைந்தது. 2016-2017ல் மாநில அரசு ரூ.46,127.14 கோடியை மூலதனமாகவும், கடனாகவும் மற்றும் மானியங்கள்/ உதவி தொகையாகவும் அளித்தது.
கடைசியாக இறுதி செய்யப்பட்ட கணக்குகளின் படி, மொத்தமுள்ள 68 செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் 39 நிறுவனங்கள் ரூ.931.08 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. 25 நிறுவனங்கள் ரூ.9,366.31 கோடி இழப்பை அடைந்துள்ளன. மூன்று நிறுவனங்கள் லாபமும் ஈட்டவில்லை, அதே சமயம் நஷ்டத்தையும் ஈட்டவில்லை. நஷ்டம் அடைந்த பொதுத்துறை நிறுவனங்களில், தமிழ்நாடு மின்வாரியம் ரூ.5,786.82 கோடி, மாநிலத்தில் மொத்தம் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் ரூ.3049.39 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் ரூ.177 கோடி, தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மதுரை ரூ.345 கோடி, சேலம், ரூ.305 கோடி, நெல்லை, 367 கோடி, விழப்புரம் ரூ.376 கோடி கோவை ரூ.464 கோடி கும்பகோணம் ரூ.476 கோடி, மாநகர் போக்குவரத்து கழகம் ரூ.519 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்த்து தமிழ்நாடு கனிம நிறுவனம் ரூ.503 கோடி, தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் ரூ.91 கோடி சதன் ஸ்டெக்சுரல்ஸ் நிறுவனம் ரூ.114 கோடி, தமிழ்நாடு சர்க்கரை கழகம் ரூ.161 கோடி, தமிழ்நாடு தொழில் வெடி மருந்து நிறுவனம் ரூ.281 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. லாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவனங்களில், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் ரூ.257.53 கோடி, தமிழ்நாடு மின்விசை நிதி அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் ரூ.129.74 கோடி, டைடல் பார்க் நிறுவனம் ரூ.49.28 கோடி, ஐடி விரைவு சாலை நிறுவனம் ரூ.33.39 கோடி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் ரூ.30.97 கோடி, தமிழ்நாடு மேக்னசைட் லிமிட்டெட் நிறுவனம் ரூ.21.21 கோடி லாபம் ஈட்டியுள்ளன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நஷ்டத்தை மாநில அரசு முழுமையாக ஈடுசெய்கிறது. மொத்தம் உள்ள 6 செயல்படாத நிறுவனங்களில் ஒன்றை மூடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 6 நிறுவனங்களையும் மூடுவதற்கான முடிவை அரசு தான் எடுக்க வேண்டும். கடந்த 2017 மார்ச் 31ம் தேதியன்று 74 பொதுத்துறை நிறுவனங்களின் கடன்கள் மட்டும் ரூ.1,04,151.14 கோடி ஆகும். இந்த கடன்களுக்கு ரூ.13,846.29 கோடி வட்டி செலுத்தப்பட்டுள்ளது. விற்பனை வரவு ரூ.1,10,850.43 கோடி ஆகும். இந்த அடிப்படையில், நமக்கு ஏற்பட்ட திரண்ட இழப்பு மொத்தம் ரூ.78,854.25 கோடி ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் ரூ.78,854 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.துறைகள் நஷ்டம்தமிழ்நாடு மின்வாரியம் ரூ.5,786.82 கோடி போக்குவரத்து கழகம் ரூ.3049.39 கோடிகனிம நிறுவனம் ரூ.503 கோடிதேயிலை தோட்ட கழகம் ரூ.91 கோடி சதன் ஸ்டெக்சுரல்ஸ் ரூ.114 கோடி சர்க்கரை கழகம் ரூ.161 கோடி வெடி மருந்து நிறுவனம் ரூ.281 கோடி
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!