விசேஷங்கள் குறைவால் வாழை இலை விலை கடும் சரிவு

மதுரை: வரத்து அதிகரிப்பு, முகூர்த்த தினங்கள் குறைவால் வாழை இலை விலை கடும் சரிவடைந்துள்ளது. மதுரை சென்ட்ரல் காய்கறிகள் மார்க்கெட்டிற்கு மேலூர், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், திருச்சி மற்றும் தேனி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வாழை இலை கொண்டு வரப்படுகிறது. தற்போது பருவமழை ஓரளவு பெய்துள்ளதால், வாழை விவசாயம் செழிப்படைந்துள்ளது.  கடந்த சில மாதங்களாக வாழை இலை, கடும் வறட்சி, நோய் தாக்குதல் உள்ளிட்ட பாதிப்புகளால் வரத்து குறைந்து, விலை கூடுதலாக விற்பனையாகி வந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு, முகூர்த்த தினங்கள் குறைவால் விலை கடுமையாக சரிவடைந்துள்ளது. கடந்த மாதம் 250 இலைகள் கொண்ட கட்டு ₹22 ஆயிரத்துக்கு விற்பனையாகி வந்த நிலையில், நேற்று ₹2500க்கு விற்பனையானது.

மதுரை சென்ட்ரல் காய்கறிகள் மார்க்கெட் சங்க தலைவர் முருகன் கூறும்போது, ‘‘மதுரை மாவட்டத்தில் மேலூர், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி நடக்கிறது.  குறிப்பாக, விவசாயிகள் பெரும்பாலும், நாட்டு வாழை, ஒட்டு வாழையை அதிகம் பயிரிடுகின்றனர்.

தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள் பலரும் இலைக்காக வாழை சாகுபடியை அதிகரித்துள்ளனர். இதனால் வரத்து அதிகரித்துள்ளது. விலை கடுமையாக சரிவடைந்துள்ளது. இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் பலரும் இலைகளை மொத்தமாக அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். தொடர்ந்து, இன்னும் சில தினங்களுக்கு இதே விலை நீடிக்க வாய்ப்புள்ளது,’’

வாடாத வாழை இலை:

மதுரை மார்க்கெட்டில் திருப்புவனம், மேலூர் வாழை இலைகளுக்கு தனி மவுசு உள்ளது. இங்கிருந்து வரும் வாழை இலைகள் அளவில் பெரியதாக உள்ளன. மேலும், திருப்புவனம் வாழை இலைகள் 5 நாட்களுக்கும் மேல் வாடாமல் இருப்பதால், இப்பகுதி இலைகளை அதிகளவில் விரும்பி வாங்கிச்செல்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: